

தேர்தலில் போட்டியிடாமல் சசிகலா முதல்வராக பதவி ஏற்க உள்ளது மக்கள் மனதில் எதிர்மறை கருத்தை ஏற்படுத்தி உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருவாரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் வறட்சி ஏற்பட்டுள்ளது. பயிர்கள் பாதித்துள்ள வேதனையில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
ஆனால், தமிழக அரசு 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு மட்டும் நிவாரணம் அறிவித்திருப்பது வேதனையளிக்கிறது.
மேலும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5,465 அறிவித்திருப்பதும் விவசாயிகளுக்கு போதுமானதாக இல்லை. விவசாயிகளின் கோரிக் கைப்படி ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும்.
விவசாயத் தொழிலாளர்களுக் கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.
மத்திய அரசு, பட்ஜெட்டில் பொது மக்கள் நேரடியாக செலுத்தும் கலால் வரியை கூடுதலாக ரூ.1 லட்சம் கோடிக்குமேல் உயர்த்தியுள்ளது. இவற்றைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பிப்.7-ம் தேதி (இன்று) மத்திய, மாநில அரசு அலுவலங்களின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தவுள்ளனர்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சசிகலாவுக்கு எந்த ஒரு பதவியும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறாமல் சசிகலா முதல்வராக பதவி ஏற்க உள்ளது மக்கள் மனதில் எதிர்மறையான கருத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.