

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா, சென்னையில் உள்ள பல்வேறு கட்சி அலுவலகங்களில் கொண் டாடப்பட்டது. எம்ஜிஆர் நினைவிடத் தில் முன்னாள் முதல்வர் ஜெய லலிதாவின் அண்ணன் மகள் தீபா மரியாதை செலுத்தினார்.
அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, தமிழகம் முழு வதும் நேற்று உற்சாகமாக கொண் டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் அதிமுகவினர், எம்.ஜி.ஆரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவின் அண்ணன் மகள் தீபா, மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நேற்று காலை மலர்வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அப்போது ஆயிரக் கணக்கான ஆதரவாளர்கள் அங்கு குவிந்தனர். தீபாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரி அவரின் ஆதரவாளர்கள் திடீரென சாலை மறியல் ஈடுபட்ட தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப் பட்டது. பின்னர், போலீஸார் வந்து பேச்சுவார்த்தை நடத்திய தால் மறியல் போராட்டம் கைவிடப் பட்டது.
தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனிலும் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எம்.ஜி.ஆர். படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் நிருபர்களிடம் திருநாவுக் கரசர் கூறும்போது, ‘‘எம்.ஜி.ஆர்., இந்த மாநிலத்துக்கு மட்டுமல்ல, தேசிய தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர் என்று மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறி உள்ளார். உலகம் போற்றும் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இறந்த பிறகு வழிபடுவது இயல்பு. அந்த வகையில்தான் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவை நாங்கள் கொண்டாடுகிறோம்’’ என்றார்.
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் உருவப் படத்துக்கு அக்கட்சியின் தலைவர் விஜய காந்த் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார். பின்னர், அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவித்தார்.
தமிழக பாஜக சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகன் வழி பேரன் பிரவீன், எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய அவரது அண்ணன் மகள் லீலாவதி உள்ளிட்டோரும் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் பிரவீன் கூறும்போது, ‘‘எம்.ஜி.ஆர் இன்று இருந்திருந்தால் பிரதமர் நரேந்திர மோடியின் நேர்மையான, தூய்மையான ஆட்சியை மனதாரப் பாராட்டி இருப்பார். மத்திய அரசை திறம்பட வழி நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி தலைமைக்கு உறுதுணை யாக இருக்கும் வகையில் அரசி யலில் நானும் ஈடுபட முடி வெடுத்து பாஜகவில் இணைய முடிவெடுத்துள்ளேன்’’ என்றார்.
தீபாவை வரவேற்பதற்காக மெரினா கடற்கரை சாலையில் கூடியிருந்த அதிமுக தொண்டர்கள். படங்கள்: எல்.சீனிவாசன்