

தேர்தல் வந்துவிட்டாலே திடீரென முளைத்து திடீரென காணாமல் போகும் காளான் கட்சிகளுக்கு கொண்டாட்டம்தான். கிழியாத பேனரையும் தேய்ந்த போன லெட்டர் பேடையும் மட்டுமே மூலதனமாக வைத்துக்கொண்டு அகில இந்திய அளவில் தங்கள் கூட்டணிக்கு இருக்கும் வாய்ப்பு குறித்து புள்ளிவிவரத்துடன் பொளந்து கட்டுவார்கள். திண்டுக்கல் பகுதியில் இப்போது அந்தக் கண்கொள்ளாக் காட்சிகள் தினம் தினம் அரங்கேறி வருகின்றன.
திடீர் கட்சிகளின் பெயர்களைச் சொன்னால் ’உங்களால்தான் நாற்பது தொகுதிகளிலும் எங்களுடைய வெற்றிவாய்ப்பு கெட்டுப்போனது’ என்று இழப்பீடு கேட்பார்கள். திண்டுக்கல் மக்களவை தொகுதியில் கடந்த இரு வாரமாக லெட்டர் பேடு கட்சிகள் ரவுண்டு கட்டி அடிக்கின்றன.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை அருகே வாரத்துக்கு மூன்று அல்லது நான்கு போராட்டங்கள் நடக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை லெட்டர் பேடு கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்துபவைதான். இவர்கள் எல்லாம் இத்தனை நாட்கள் எங்கே இருந்தார்கள் என்று தெரியவில்லை.
திடீரென கிளம்பி வந்து, ‘வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவோம்’ என்று முழங்குவார்கள்.
பொதுமக்கள் மீது இவர்களுக்கு வந்திருக்கும் திடீர் கரிசனம் குறித்து ஆளும் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் ஒருவரிடம் கேட்டதற்கு, “இவங்க சொல்றத இவங்க பொண்டாட்டி புள்ளைகளே கேட்காது. ஆனா, ‘எங்களுக்கு பின்னால் லட்சோப லட்சம் பேர் இருக்கிறார்கள்’ என்று கூசாம பொய் சொல்லுவாங்க. இவங்களால ஓட்டு வாங்கிக் குடுக்க முடியாது.
ஆனா, எசகுபிசகா எதையாச்சும் கெளப்பிவிட்டு, விழுகுற ஓட்டையும் கெடுத்துவிட்டுருவாங்க. அதனாலதான் தேர்தல் நேரத்துல இவங்களுக்கும் இரைய போட்டு கூடவே வைச்சுக்க வேண்டியிருக்கு’’ என்றார்.