Published : 29 Mar 2017 11:10 AM
Last Updated : 29 Mar 2017 11:10 AM

போடி சட்டப்பேரவை தொகுதியில் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை: முன்னாள் திமுக எம்எல்ஏ லெட்சுமணன் குற்றச்சாட்டு

போடி சட்டப்பேரவைத் தொகுதியில் மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை, என முன்னாள் திமுக எம்எல்ஏ லெட்சுமணன் குற்றம் சாட்டியுள்ளார். தேனி மாவட்டத்தில் போடி சட்டப்பேரவைத் தொகுதி கடந்த 1957-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இத்தொகுதியில் கடந்த 2011, 2016-ம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்ற ஓ.பன்னீர்செல்வம் நிதி அமைச்சராகவும், சிறிது காலம் தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார்.

தொகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கைகளான போடியில் ரூ.93 கோடியில் அரசு பொறியியல் கல்லூரியும், வீரபாண்டியில் ரூ.8.48 கோடியில் அரசு கலைக்கல்லூரியும் கட்டப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலம் இல்லாமல் அவதியடைந்து வந்த கூழையனூர்-கோட்டூர் கிராமத்திற்கு இடையே ரூ.5.34 கோடியில் புதிய பாலம் அமைத்ததோடு, தார்சாலை வசதிகளும் செய்யப்பட்டது. தேக்கம்பட்டி, கோட்டூரில் ரூ.16.83 கோடி மதிப்பில் பல்வகை தொழில்நுட்ப பூங்கா என கடந்த 6 ஆண்டுகளில் சுமார் ரூ.600 கோடிக்கு மேல் நலத்திட்ட உதவி மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், பல இடங்களில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்கள் இன்னமும் திறக்கப்படாமல் உள்ளதோடு, மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.


விமலா

இதுகுறித்து ‘தி இந்து’விடம் போடியை சேர்ந்த விமலா (குடும்ப தலைவி) கூறுகையில், வேலை வாய்ப்பினை உருவாக்கும் வகையில் தொழிற்சாலைகள் இல்லை, மலைகிராமங்களில் சாலை வசதி இல்லை, இதனால் மலைகிராமங்களில் உற்பத்தியாகும் விளை பொருட்களை கொண்டு வருவதில் சிரமம் உள்ளது. முதியோர், விதவை உதவித்தொகை பெற பயனாளிகள் அலைக்கழிப்பு செய்யப்படுகிறார்கள். மேலும் மீனாட்சிபுரத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நவீன வசதியுடன் கூடிய கழிப்பறைகள், அரண்மனைப்புதூரில் ரூ.27.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சேவை மையங்கள், சத்துணவு மையங்கள் என பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்னமும் திறக்கப்படாமல் உள்ளது.

வறட்சியின் பிடியில்

போடி தொகுதியின் முன்னாள் திமுக எம்எல்ஏ லெட்சுமணன் கூறுகையில், ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் வாக்குறுதியின்படி மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்கப்படவில்லை, குரங்கனி-டாப்ஸ்டேசன்ரோடு வசதியில்லை, சாக்குலூத்துமெட்டுச்சாலை திட்டம் என மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப் படவில்லை, கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 30 முறை மட்டுமே தொகுதிக்கு வந்துள்ளார். வந்தாலும் மக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுவதில்லை, 18-ம் கால்வாயில் தண்ணீர் முறையாக திறக்கப்படுவதில்லை, தந்தை பெரியார் பாசன கால்வாயில் தூர்வாரப்படவில்லை, இதனால் தண்ணீர் இன்றி போடி தொகுதி வறட்சியின் பிடியில் இருக்கிறது என்றார்.


லெட்சுமணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x