

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. ஆந்திர நோயாளி ஒருவருக்கு இதயமும் நுரையீரலும் ஒரே நேரத்தில் பொருத்தப்பட்டது.
சென்னையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (32). சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த இவர் சிகிச்சைக்காக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். இதனைத் தொடர்ந்து டாக்டர்கள் குழுவினர் அறுவைச் சிகிச்சை செய்து பாலகிருஷ்ணன் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயம், நுரையீரலை எடுத்தனர்.
சிறுநீரகங்கள், கல்லீரல் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 3 நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. இதயம் மற்றும் நுரையீரல் மேடவாக்கத்தை அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த 52 வயதான நோயாளி ஒருவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி போரூரில் இருந்து இதயம் மற்றும் நுரையீரலுடன் டாக்டர்கள் குழுவினர் ஆம்புலன்ஸ் மூலம் நேற்று காலை 9.28 மணிக்கு புறப்பட்டனர். சரியாக 15 நிமிடத்தில் அதாவது 9.43 மணிக்கு மேடவாக்கம் அடுத்த பெருங்குடியில் உள்ள குளோபல் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்றது.
மருத்துவமனையில் தயார் நிலையில் இருந்த டாக்டர்கள் குழுவினர் இதயம் மற்றும் நுரையீரலை ஒரே நேரத்தில் அறுவைச் சிகிச்சை மூலம் நோயாளிக்கு பொருத்தினர். முன்னதாக போரூர் முதல் பெரும்பாக்கம் வரை ஆம்புலன்ஸ் விரைவாக செல்வதற்காக சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போலீஸார் பார்த்துக் கொண்டனர்.