Published : 09 Jan 2014 12:00 AM
Last Updated : 09 Jan 2014 12:00 AM

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமன விவகாரத்தில் மேல் நடவடிக்கை கூடாது

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய சட்ட அமைச்சகம் மேல் நட வடிக்கை எதையும் மேற்கொள்ளக் கூடாது. இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி களாக சில குறிப்பிட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களே தொடர்ந்து நீதிபதி களாக நியமிக்கப்படுகின்றனர். எல்லா சமூகங்களிலும் தகுதியான வழக்கறிஞர் கள் உள்ள நிலையில் எல்லா சமூகங் களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. சமூகநீதியை உறுதிப்படுத்திட எல்லா சமூகங்களுக்கும் நீதிபதிகள் நியமனத்தில் உரிய பிரதிநிதித் துவம் அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவியிடங்களை நிரப்புவதற்காக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலிஜியம்) சார்பில் 12 பேர் கொண்ட பட்டியல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் 10 பேர் வழக்கறிஞர்கள். எனினும் ஏற்கெனவே எந்தெந்த சமூகத்தவர்கள் அதிக அளவில் நீதிபதிகளாக உள்ளார்களோ அத்தகைய சமூகங்களைச் சேர்ந்தவர்களே தற்போதும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இந்த நீதிபதிகள் தேர்வு முறை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக உள்ளது என்று அந்த மனுவில் வழக்கறிஞர் காந்தி கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், கே.கே.சசிதரன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், தற்போது நீதிபதிகள் பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வழக்கறிஞர் பணியில் போதுமான பயிற்சி இல்லை. எல்லா சமூகங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. அதேபோல் பட்டியலை பரிந்துரை செய்யும் முன் நீதிபதிகள் தேர்வுக் குழுவானது போதிய அளவில் கலந்தாலோசனை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. ஆகவே, இந்தப் பரிந்துரைப் பட்டியல் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வாதிட்டார். இதனையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வியாழக்கிழமை பிற்பகலுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x