Published : 23 Jun 2016 11:01 AM
Last Updated : 23 Jun 2016 11:01 AM

ஏற்றுமதி செய்யப்படும் சிற்பங்களுக்கு தடையில்லா சான்று பெற அலைக்கழிப்பு: மாமல்லபுரத்திலேயே வழங்க கோரிக்கை

மாமல்லபுரம் பகுதியில் கற்சிற் பங்கள் வடிக்கப்பட்டு, பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. இந்தத் தொழிலில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக் காலமாக இந்திய கோயில்களில் உள்ள புராதன சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் சம்பவங்கள் அதி கரித்து வருவதைத் தொடர்ந்து, இந்தியாவில் இருந்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படும் கல் மற்றும் உலோக சிற்பங்களுக்கு, அவை பழங்கால சிற்பங்கள் இல்லை என்பதை உறுதி செய்து, இந்திய தொல்லி யல் ஆய்வுத் துறையிடம், தடை யில்லாச் சான்று பெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட் டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் அலுவலகங்கள் இருந்தாலும், சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தொல்லியல் ஆய்வுத் துறை அலுவலகத்தில் உள்ள தொல்லி யல் கண்காணிப்பாளர் தலைமை யிலான குழுவிடம் மட்டுமே தடையில்லாச் சான்று பெற முடியும்.

மாமல்லபுரத்தில் வடிக்கப்படும் சிற்பங்கள் பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதால், அவற்றுக்கான தடையில்லாச் சான்று பெற, 58 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சென்னைக்கு சிற்பங்களைக் கொண்டு வந்து, பெற வேண்டியுள்ளது. இதனால் சிற்பிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.

இது தொடர்பாக மாமல்லபுரம் சிற்ப உற்பத்தியாளர் சங்கத்தின் செயலர் கே.மகாதேவன் கூறும் போது, “சிற்பங்கள் அதிக பாரம் உடையவை என்பதால் சென்னைக்கு எடுத்துச் செல்வது சிரமமாக உள்ளது. போக்கு வரத்தின்போது சிலைகள் சேத மடையவும் வாய்ப்பு உள்ளது. மேலும் சிற்பத்தை ஏற்றவும், இறக்கவும் அதிக ஆள் பலமும் தேவைப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு முறை தடையில்லாச் சான்று பெறவும் ரூ.10 ஆயிரம் வரை செலவு ஏற்படுகிறது. இதனால் சிற்பிகளுக்கு வருவாய் இழப்பும், கால விரயமும் ஏற்படுகிறது. மாமல்லபுரத்தை மத்திய அரசு ‘சிற்ப கிராமம்’ என்று அறிவித்துள்ள நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள தொல்லியல் துறை அலு வலகத்திலேயே சிற்பங்களுக்கு தடையில்லாச் சான்று வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என்றார்.

இதுகுறித்து சென்னையில் உள்ள தொல்லியல் துறையின் கண்காணிப்பாளர் க.லூர்துசாமி யிடம் கேட்டபோது, “ஒரு சிற்பத்துக்கு தடையில்லாச் சான்று வழங்க வேண்டும் என்றால், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு ஆய்வு செய்து சான்று அளிக்கிறது. அந்தக் குழுவில், ஓய்வூபெற்ற தொல்லியல் துறை அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். இந்தப் பணிக்கு அவர்களுக்கு ஊதியம் எதுவும் வழங்கப்படுவதில்லை. இந்தக் குழுவை தமிழகத்தில் உள்ள பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் செல்வது சிரமம். அதனால்தான் சிற்பங்களை சென்னைக்கு கொண்டுவர அறிவுறுத்தப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் குழு அமைப்பது குறித்து மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி முன்னாள் எம்பி பெ.விஸ்வநாதன் கூறும் போது, “மாமல்லபுரம் சிற்பப் பூங்காவாக அறிவிக்கப்பட்டால், அங்கு வடிக்கப்படும் சிற்பங் களுக்கு தடையில்லாச் சான்று, மாமல்லபுரத்திலேயே வழங்கும் நிலை உருவாகும்” என்றார்.

பெ.விஸ்வநாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x