Published : 01 Jun 2017 02:59 PM
Last Updated : 01 Jun 2017 02:59 PM

மாலை 4 மணிக்கு சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிப்பு: பொதுப்பணித்துறை உறுதி

தீ விபத்துக்குள்ளான தியாகராய நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு இடிக்கப்படும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பொதுப் பணித்துறை நிபுணர்கள் பொறியாளர்கள் ஆலோசனையின்படி மாலை 4 மணிக்கு கட்டிடம் இடிக்கப்படுகிறது. கட்டிடத்தை இடிக்கும் பணியில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடட் நிறுவனமும் இணைந்து செயல்படுகிறது.

கட்டிடம் இடிக்கப்படுவதை ஒட்டி அப்பகுதியில் 200 மீட்டர் சுற்றளவில் இருக்கும் அனைத்து குடியிருப்புப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.

ரூ.420 கோடி இழப்பு:

சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.420 கோடி மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்காலிக மதிப்பீடே. முழு மதிப்பீடு இன்னும் செய்யப்படவில்லை.

நடந்தது என்ன?

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் நேற்று (புதன்கிழமை) காலை 4 மணியளவில் கடையின் தரை தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனடியாக தி.நகர், தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், எழும்பூரில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் 40 வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

கடையின் 7-வது தளத்தில் கேன்டீன் உள்ளது. அங்கு 10 ஊழியர்கள் தங்கியிருந்தனர். அவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். கீழ்ப்பாக்கம் மற்றும் எழும்பூரில் இருந்து 2 ‘ஸ்கைலிப்ட்’ வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 7-வது தளத்தில் இருந்த ஊழியர்கள் மீட்கப்பட்டனர். மேலும் கடையின் உள்ளே இருந்த 4 காவலாளிகளும் மீட்கப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் தரை தளத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தபோதே அதிக வெப்பம் தாங்காமல் 10 அடி உயர 3 பெரிய கண்ணாடிகள் பயங்கர சத்தத்துடன் உடைந்து சிதறின. தரை தளத்தில் இருந்து மட்டும் கரும்புகை வந்து கொண்டிருந்த நிலையில், 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்த தளங்களில் இருந்தும் கரும்புகை வெளியேற தொடங்கி, 7 தளங்களிலும் தீப்பிடித்து அதிக அளவில் கரும்புகை வெளியேறியது.

காலை 10 மணிக்குள் சுமார் 80 டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட தண்ணீரை பீய்ச்சி அடித்த பின்னரும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஸ்கைலிப்ட் வாகனம் மூலம் 5 மற்றும் 6-வது தளங்களின் வெளிப்புற கண்ணாடிகளை உடைத்து உள்ளே தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதன் பின்னரும் தீ கட்டுக்குள் வரவில்லை.

வெப்பம் மேலும் அதிகரிக்கவே, 7 மாடி கட்டிடம் விரிசல் விட ஆரம்பித்தது. விரிசல் விடும் சத்தம் வெளியே பயங்கரமாக கேட்டது. அதை நேரில் பார்க்கவும் முடிந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிலைமை மோசமடைவதை உணர்ந்த அதிகாரிகள் அந்த இடம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கட்டிடம் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக கூறி, அந்த இடத்தை அபாயகரமான பகுதியாக அறிவித்து, பொதுமக்கள் அங்கே வர தடை விதித்தனர். பக்கத்து கட்டிடங்களில் இருந்தவர்களையும் உடனடியாக வெளியேற்றினர். தெற்கு உஸ்மான் சாலையின் இருபுறமும் தடுப்புகளை வைத்து வாகனங்களை மாற்று வழியில் திருப்பிவிட்டனர்.

இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு கட்டிடம் முழுமையாக இடிக்கப்படுகிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், ''கட்டிடம் தனது உறுதித் தன்மையை முழுவதுமாக இழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் இடிப்புப் பணிகள் இன்று தொடங்கப்பட உள்ளன. 3 நாட்களுக்குள் கட்டிடம் முழுவதுமாகத் தரை மட்டமாக்கப்படும்.

கட்டிடங்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் வெடி வைத்துத் தகர்க்கப்படாது. இயந்திரம் மற்றும் ஆட்களைக் கொண்டு கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்படும். மத்திய அரசின் ராட்சத இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெறும். இடிக்கும் பணிக்கு ஆகும் செலவு முழுவதும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும்" எனக் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x