Published : 31 Mar 2014 11:14 AM
Last Updated : 31 Mar 2014 11:14 AM

இரைப்பை குடல் நோய் சிகிச்சை சர்வதேச கருத்தரங்கம்:அப்போலோ மருத்துவமனை நடத்தியது

அப்போலோ மருத்துவமனையின் இரைப்பை குடல் சிகிச்சை பிரிவு சார்பில் அப்போலோ சர்வதேச மேற்புற இரைப்பை குடல் அறுவை சிகிச்சை (AIUGISU-2014) கருத்தரங்கம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கருத்தரங்கிற்கு அப்போலோ மருத்துவமனை இரைப்பை குடல் மற்றும் லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நிபுணரும், அமைப்புக்குழு தலைவருமான டாக்டர் பிரசன்னகுமார் ரெட்டி தலைமை தாங்கினார். அமைப்புக் குழுவின் செயலாளர் டாக்டர் டி.ஜி.பாலசந்தர் முன்னிலை வகித்தார். இந்தியா, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி மையங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், டாக்டர்கள், முதுநிலை பட்டதாரிகள் பலர் பங்கேற்றனர். மேலும் பெல்ஜியம், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து 3 டாக்டர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

இந்து குழும சேர்மன் என்.ராம் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:

இந்தியாவில் 60 சதவீதமாக இருந்த நோய் தடுப்பு முறைகள், தற்போது குறைந்து வருகிறது. வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் நோய் தடுப்பு முறைகளை கடைப்பிடிக்கின்றனர். அதேபோல இந்தியாவிலும் நோய் தடுப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும். டாக்டர்கள் கடவுளுக்கு சமமாக மதிக்கப்படுகின்றனர். அதனால், டாக்டர்களாகிய நீங்கள் நோயாளிகளுக்கு தேவையான சிறப்பான சிகிச்சையை அளிக்க வேண்டும் என்றார்.

இந்த கருத்தரங்கில் டாக்டர்கள் டிஜி.பாலசந்தர், பிரசன்னகுமார் ஆகியோர் பேசியதாவது:

அச்சம் ஏற்படுத்துகிற நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அதிக கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க இதுபோன்ற கருத்தரங்கங்கள் பெரிதும் உதவியாக இருக்கும். உணவு உட்கொள்வதில் உள்ள பிரச்சினைகள், வயிற்றில் ஏற்படும் புற்றுநோயால் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். எண்டோஸ்கோப்பி சிகிச்சை முறைகள், ரோபாட்டிக், லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மற்றும் இரைப்பை, குடல் நோய்களுக் கான அறுவைச் சிகிச்சையில் தொடர்புடைய நவீன தொழில் நுட்பங்கள் பற்றி கருத்தரங்கில் விவாதிக்கப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x