

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் துக்கு நிதியுதவி அளித்ததாக கிடைத்த தகவலின்பேரில் சென் னையை சேர்ந்த 6 பேரிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய விசாரணை யில் ஜமீல் முகமது என்ற இளை ஞரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழகத்தை சேர்ந்த இக்பால் என்ற இளைஞருடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத் தப்பட்ட விசாரணையில் ராஜஸ் தானை சேர்ந்த ஜமீல் முகமதுவும், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த இக்பாலும் சேர்ந்து ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டி கொடுக்கும் வேலையை செய்து வந்தது தெரிந்தது.
சென்னையை சேர்ந்த 6 பேரிடம் இருந்து பல லட்சம் வசூலித்த இக்பால், அதை ஐ.எஸ். இயக்கத்துக்காக ஜமீல் முகமதுவிடம் கொடுத்திருக் கிறார். இதையறிந்த ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் இக்பாலை கைது செய்ய, சென்னை வந்தனர். ஆனால், சில நாட்களுக்கு முன்னர் தங்கக் கட்டிகள் கடத்தல் வழக்கில் சிக்கிய இக்பாலை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்திருப்பது அதன் பின்னரே தெரியவந்தது. பின்னர் நீதிமன்ற ஆணையின்படி இக்பாலை கைது செய்து ராஜஸ்தான் அழைத்து சென் றனர்.
இக்பாலிடம் ராஜஸ்தானில் நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி அளித்த சென்னையை சேர்ந்த 6 பேரின் பெயர் மற்றும் முகவரியை கொடுத்திருக்கிறார். அந்த 6 பேரின் விவரங்களை சென்னை கிண்டியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை(என்.ஐ.ஏ.) அதிகாரிகளிடம் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கொடுத்துள்ளனர். 6 பேரிடமும் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்து, 6 பேரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர். இன்று (23-ம் தேதி) 6 பேரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.