

கோயம்பேடு மார்க்கெட்டில் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் நடத்தப்படுவதால், அங்கு தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதைத் தடுக்க மார்க்கெட் நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் பூ, பழம், காய்கறிகள் என மொத்தம் 3 ஆயிரத்து 194 கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட்டில் நுழைவு வாயில் எண் 14-ல் லாரிகள் நுழைந்து, எண்.7 நுழைவுவாயில் வழியாக வெளியே செல்லும் சாலை, அதிக வாகனங்கள் வந்து செல்லும் சாலையாக உள்ளது. இந்த சாலையில் நடைபாதை கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், சாலையில் சென்ற தொழிலாளர், லாரி மோதி கடந்த ஆண்டு உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, மார்க்கெட் நிர்வாகம் சார்பில், சாலையின் இருபுறமும் உள்ள நடைபாதைகளில் ஆக்கி ரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு, பொதுமக்கள் எந்த இடையூறும் இன்றி செல்லும் வகையில் அங்கு இரும்பு கூண்டுகள் அமைக்கப்பட் டன.
இந்நிலையில், ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள், இப்போது சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்தி வருவதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அங்குள்ள வியாபாரிகள் கூறியதாவது:
கோயம்பேடு மார்க்கெட்டில் 7-வது எண் முதல் 14-வது எண் வரையிலான சாலைகளின் இரு புறங்களிலும், பொது இடங் களை ஆக்கிரமித்து காய்கறி மற்றும் பழக் கடைகள் நடத்தப் பட்டு வருகின்றன. மேலும் கரு வேப்பிலை, கீரை வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. நாங்கள் மார்க்கெட் நிர்வாகத்திடம் உரிய ஆவணங்களை வழங்கி, உரிமக் கட்டணம் செலுத்தி, உரிமம் பெற்று, மாதந்தோறும் பராமரிப்பு கட்டணமும் செலுத்தி வருகிறோம். ஆக்கிரமிப்பு கடைக்காரர்கள் எந்த வகையிலும் மார்க்கெட்டுடன் தொடர்புடையவர்கள் இல்லை. சாலையில் செல்லும் பொதுமக் களால், இவர்களது கடைக்கு லேசாக ஏதேனும் இடையூறு ஏற்பட்டாலும், பொதுமக்களை இழிவாக பேசி வருகின்றனர். இவர்களால்தான் மார்க்கெட்டில் குப்பைகள் அதிகம் சேர்கிறது.
இந்த சாலையில் தினமும் 600 லாரிகள் சரக்குகளுடன் வருகின் றன. இங்கிருந்து சரக்குகளை ஏற்றிச் செல்ல சுமார் 2 ஆயிரத்துக் கும் மேற்பட்ட சிறிய ரக சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. அதனால் அந்த சாலை, போக்குவ ரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளது. சாலையோர ஆக்கிரமிப் புகளால் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. எனவே, இந்த சாலையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நிரந்தரமாக அகற்றி, சீரான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக மார்க்கெட் நிர்வாக அலுவலக அதிகாரியிடம் கேட்டபோது,
‘‘இதுவரை ஆக்கிர மிப்புகளை அகற்றி, பொருட்களை பறிமுதல் செய்து, அவர்களை எச்சரித்து வந்தோம். அவர்கள் மீ்ண்டும் ஆக்கிரமிப்பு கடைகளை நடத்தி வருகின்றனர். அதனால், தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடை நடத்துவோர் மீது கிரிமினல் நட வடிக்கை எடுக்க அனுமதி கோரி, அரசுக்கு கோப்புகளை அனுப்பி யிருக்கிறோம். அனுமதி கிடைத்த பின், ஆக்கிரமிப்பு கடைகள் மார்க்கெட்டில் முற்றிலுமாக ஒழிக்கப்படும்’’ என்றார்.