மகசூல் பாதிப்பால் தேங்காய்க்கு கடும் தட்டுப்பாடு: விலை கிலோ ரூ.33 ஆக உயர்வு

மகசூல் பாதிப்பால் தேங்காய்க்கு கடும் தட்டுப்பாடு: விலை கிலோ ரூ.33 ஆக உயர்வு
Updated on
2 min read

தென்னை மகசூல் பாதிப்படைந்துள்ள நிலையில், தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கிலோ 33 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. தேவைக்கேற்ப தேங்காய் கிடைக்காததால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

குமரி மாவட்டத்தில் இருந்து அதிக அளவில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு தேங்காய் கொண்டு செல்லப்படுகிறது. இங்கு முதன்மையான விவசாயமாக தென்னை உள்ளது. ஜனவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை தேங்காய் அதிகளவில் கிடைக்கும். 5 மாதங்களாக பெய்யும் சீஸன் மழையால் தேங்காய் அதிக அளவில் காய்த்துக் குலுங்கும்.

ஆனால், இந்த ஆண்டு பருவமழை இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. தண்ணீரின்றி தென்னை ஓலைகள் அதிகம் உதிர்ந்து மரங்கள் சேதமாகி வருகின்றன.

கடும் தட்டுப்பாடு

தென்னை மரங்களில் தேங்காய் உற்பத்தி பெரும் பாதிப்படைந்துள்ளது. 1,000 தேங்காய் உற்பத்தியகும் தென்னந் தோப்புகளில் 300 தேங்காய் கிடைப்பதே அபூர்வமாக உள்ளது. இதனால், அன்றாடத் தேவைகள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலை தேவைக்கு தேங்காய்கள் கிடைக்காமல், வியாபாரிகள் பெரும் சிரமம் அடைகின்றனர்.

விலை உயர்வு

இதுபோல், பொதுமக்களும் தேங்காயை வாங்கி பயன்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் கடந்த இரு மாதங்களுக்கு முன் 20 ரூபாயாக இருந்த ஒரு கிலோ தேங்காய் விலை தற்போது 33 ரூபாயாக உயர்ந்துள்ளது. விலை அதிகமாக இருக்கும் நேரத்தில் தேங்காய் மிகவும் குறைவாக கிடைப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஈத்தாமொழியை சேர்ந்த விவசாயி ராமநாதன் கூறும்போது, ``கடந்த 35 ஆண்டுகளாக தென்னை விவசாயம் செய்து வருகிறேன். ஒவ்வொரு ஆண்டும் தேங்காய் விலை ஏற்ற, இறக்கம் இருப்பதுண்டு. கடந்த 10 ஆண்டுகளில் இதுபோல் தேங்காய் மகசூல் குறைந்ததில்லை. கொள்முதல் விலையாக 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதே நேரம், கிலோ 33 ரூபாயில் இருந்து 38 ரூபாய் வரை சில்லரை விலைக்கு விற்கப்படுகிறது.

மரங்கள் பாதிப்பு

பருவமழை இல்லாததாலும், கடும் வெயில் சுட்டெரித்து வருவதாலும் தென்னை மரங்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன. இதே நிலை தொடர்ந்தால் ஏராளமான தென்னை மரங்கள் கருகும் நிலைக்கு சென்றுவிடும். குருத்தழுகல், காண்டாமிருக வண்டு தாக்குதல், வாடல்நோய் போன்றவற்றாலும் ஆயிரக்கணக்கான தென்னைகள் சேதமாகி வருகின்றன.

எனவே, குமரி மாவட்ட மக்களுக்கு கைகொடுத்த தென்னை விவசாயம், தற்போது கேள்வி குறியாகி வருவதால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈர்க்கும் கிடைக்கவில்லை

கண்டன்விளையைச் சேர்ந்த தேங்காய் வியாபாரி சுடலைக்கண் கூறும்போது, ``கேரளா, ஆந்திரா மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்காக அதிகமான தேங்காய் தேவைப்படுகிறது. ஆனால், தேங்காய் போதிய அளவில் இல்லாததால் 25 சதவீத தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியவில்லை. வெளிநாடுகளுக்கும் தேங்காய் ஏற்றுமதி குறைந்துள்ளது.

உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு போதிய தேங்காய்கள் இல்லை. இன்னும் 6 மாதங்கள் வரை தேங்காய் வியாபாரம் பெரும் வீழ்ச்சியை சந்திக்க வாய்ப்புள்ளது. தென்னங் கீற்றில் இருந்து எடுக்கப்படும் ஒரு கிலோ ஈர்க்கு 18 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. இந்தியாவில் பல மாவட்டங்களுக்கு துடைப்பத்துக்காகவும், வெளிநாடுகளுக்கு கலைப் பொருட்களுக்காகவும் ஈர்க்கு கொண்டு செல்லப்படுகிறது” என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in