

'தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்பினை இடித்த அ.தி.மு.க. அரசை எதிர்த்து, நாளை மறுநாள் (நவ.16) மாவட்டத் தலைநகரங்களில் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டும்' என்று அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் முன்னின்று மூன்று ஆண்டு காலம் எண்ணற்ற சிற்பிகள், சித்திரக் கலைஞர்கள், கட்டடக் கலைஞர்கள் அர்ப்பணிப்பு உழைப்பால், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. இந்த முற்றத்தை இடித்துத் தகர்க்க வேண்டும் என்று, அண்ணா தி.மு.க. அரசு திட்டமிட்டது. இதனைத் திறக்கக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த இடத்தில் பூங்கா அமைப்பதற்கு, நெடுஞ்சாலைத் துறையிடம், 2011 ஆகஸ்ட் மாதம் முற்றத்தின் சார்பில் விண்ணப்பம் தரப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. முற்றத்தின் வாயிலுக்கு உள்ளே, இரண்டு அழகான கருங்கல் நீரூற்றுகள், பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டன. 2012 ஆம் ஆண்டு, அனுமதியைத் தொடர்ந்து நீட்டிக்கக் கோரியபோது, ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி வழக்கமாக வந்து விடும் என்று அரசுத் தரப்பில் பதில் சொல்லப்பட்டது.
ஆனால், 2013 முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு நிகழ்ச்சிகள், நவம்பர் 10 ஆம் நாள் முடிவுற்றபிறகு, மூன்றாம் நாளில், 13 ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு, மூன்று பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு, அந்தப் பூங்காவுக்குள் ஆடு மாடுகள் வர விடாமல் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இடித்தனர். கருங்கள் நீரூற்றுகளையும், முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற அறிவிப்புக் கற்பலகையையும் உடைத்து நொறுக்கினர். பூங்காவில் இருந்த செடிகளையும், முள்ளிவாய்க்கால் முற்றம் முழுமைக்கும், இரவில் பிரகாசமான வெளிச்சத்தைத் தந்த விளக்குக் கம்பத்தையும் பிடுங்கி எறிந்தனர்.
அப்போது முற்றத்தின் குடிலில் படுத்து இருந்த பழ.நெடுமாறன், 'எதற்காக இடிக்கின்றீர்கள்?' என்று காவல்துறையைக் கேட்டபோது, 'வருவாய்த் துறை அதிகாரிகள்தான் இடிக்கிறார்கள், நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம்' என்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளைக் கேட்டபோது, அவர்கள் எதுவும் சொல்ல மறுத்தனர். தடுக்க முயன்ற தமிழ் உணர்வாளர்களையும், பழ.நெடுமாறனையும் கைது செய்தனர். அங்கே திரண்டு வந்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
2011 ஆகஸ்ட் மாதம் பூங்காவுக்குக் கொடுத்த அனுமதியை, அதே ஆண்டு டிசம்பர் மாதம் ரத்துச் செய்துவிட்டதாக, மோசடியாக இப்பொழுது ஒரு கோப்பை அரசு தயாரித்து உள்ளது. அப்படிச் செய்து இருந்தால், அதை பழ. நெடுமாறனுக்குத் தெரிவித்து இருக்க வேண்டும். முற்றத்தின் முகப்பை இடிப்பதற்கு முன்னால், தாக்கீது கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் சட்ட விரோதமாக, நீதிக்குப் புறம்பாக, முற்றத்தை இடித்து, உலகத் தமிழர்களின் நெஞ்சில் ஜெயலலிதா அரசு நெருப்பைக் கொட்டி உள்ளது.
இந்த அராஜகத்தைக் கேள்விப்பட்டவுடன், நான் தோழர்களோடு மதுரையில் இருந்து விரைந்தேன். போலீஸ் தடைகளை உடைத்துக்கொண்டு, முள்ளிவாய்க்கால் முற்றத்துக்குள் சென்று, 'இது தமிழர்களின் சொத்து; இதை உடைக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி, பகல் 12 மணி முதல், இரவு 9 மணி வரை அங்கேயே இருந்தேன். பழ. நெடுமாறனையும், உணர்வாளர்களையும், நீதிமன்றக் காவலுக்கு அனுப்புகிறார்கள் என்று அறிந்தபிறகு, அங்கிருந்து புறப்பட்டேன். ராஜபக்சே அரசின் செயலுக்கும், ஜெயலலிதா அரசின் செயலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
தமிழக மக்களையும், உலகத் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காக, முதல் நாள் மாலையில் சட்டசபையில் காமன்வெல்த் மாநாடு குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, மறுநாள் அதிகாலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் அக்கிரமத்தை, அ.தி.மு.க. அரசு செய்து உள்ளது.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. முயலோடும் ஓடிக்கொண்டு, வேட்டை நாயோடும் சேர்ந்து துரத்துவது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் இந்த மோசடிப் பித்தலாட்டத்தை, தமிழ் மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டார்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்தை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற, வஞ்சகமான கொடிய நோக்கம், அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது.
எனவே, முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் காக்கின்ற உறுதியோடு, அ.தி.மு.க. அரசின் அராஜகத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நவம்பர் 16 சனிக்கிழமை அன்று, காலை 11.00 மணி அளவில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று வைகோ கூறியுள்ளார்.