Last Updated : 12 Jan, 2017 09:02 AM

 

Published : 12 Jan 2017 09:02 AM
Last Updated : 12 Jan 2017 09:02 AM

தடுமாறி நிற்கும் தஞ்சை பூமி: விவசாயிகள் வாழ்வை புரட்டிப்போட்ட வரலாறு காணாத வறட்சி

பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தை நாட்டின் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடனாகப் பெற்று, அதனைத் திருப்பிச் செலுத்தாத இந்திய பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர் விஜய் மல்லையா. அவர் வெளிநாட்டுக்கு செல்ல இயலாதவாறு நாட்டின் அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் கூட, அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார். இந்த செய்தி கடந்த ஆண்டு மார்ச் மாதத்தின் ஒரு நாளில் எல்லா ஊடகங்களிலும் வெளியாகி, நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த செய்தி வெளியான அதே நாளில் சற்று நேரத்தில் இன்னொரு செய்தியும் ஊடகங்களில் வெளியானது. தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு அருகேயுள்ள சோழகன்குடிக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோ.பாலன், விவசாயப் பணிகளுக்காக தனியார் வங்கியிடம் இருந்து வாங்கிய டிராக்டர் கடனின் சில தவணை களைச் செலுத்தவில்லை என்பதற்காக, காவல் துறையின் உதவியுடன் அடித்து, இழுத்துச் செல்லப்பட்ட காட்சிகள் தொலைக்காட்சி சேனல் களிலும், சமூக ஊடகங்களிலும் வலம் வந்தன.

2011-ம் ஆண்டு வாங்கிய 3 லட்சத்து 80 ஆயிரம் கடனுக்காக, வட்டியுடன் சேர்த்து 2016 மார்ச் வரை ரூ.4 லட்சத்துக்கும் மேல் செலுத்தியிருந்தார் பாலன். மீதம் ரூ.1 லட்சத்து 38 ஆயிரம் மட்டுமே செலுத்த வேண்டும். 2 தவணைகள் மட்டும் அவரால் செலுத்த இயலவில்லை. இதற்காகத்தான் பாலன் மீது இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டது.

பாலன் மட்டுமல்ல; இவரைப் போலவே வாங்கிய கடனை முறையாக திருப்பிச் செலுத்தி யும் கூட, நெருக்கடிகள் காரணமாக சில தவணைகள் செலுத்த தாமதமாகும்போது பலவிதமான அவமானங்களுக்கு விவசாயிகள் ஆளாகின்றனர். இத்தகைய சூழலில் இருக்கும் விவசாயிகளை தற்போதைய வறட்சி மேலும் கடும் நெருக்கடியில் நிறுத்தியிருக்கிறது.

பாலன் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என அறிவதற்காக அவரது கிராமத்துக்குச் சென்றபோது, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்க் கையைப் புரட்டிப் போட்டுள்ள கடும் வறட்சி தஞ்சை மாவட்ட விவசாயிகளையும் விட்டு வைக்கவில்லை என்பது தெரிந்தது.

தனக்கு ஏற்பட்டுள்ள வறட்சி பாதிப்பு பற்றி பாலன் விவரித்தார். “மூன்று ஏக்கர் நிலத்தில் கரும்பும், ஒன்றரை ஏக்கர் நிலத்தில் நெல்லும் சாகுபடி செய்தேன். ஆழ்துளைகிணற்றில் பதிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்கள் உள்வாங்கி விட்டதால், ஆழ்துளைகிணறு மண்ணுக்குள் புதைந்து விட்டது. ஆகவே, ஆற்று நீரை நம்பி மட்டுமே பாசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஒருமுறை மட்டுமே ஆற்று நீர் வயலை எட்டிப் பார்த்தது.

ஆக, ஆற்று நீரும் வரவில்லை; நிலத்தடி நீரும் கிடைக்கவில்லை. பக்கத்து வயல்களில் ஆழ்துளைகிணறு வைத்திருப்பவர்கள் உதவியுடன் நெற்பயிரை மட்டும் ஓரளவு காப்பாற்ற முடிந்தது. 3 ஏக்கரில் இருந்த கரும்பு பயிர் முற்றாக அழிந்து விட்டது. கடந்த ஆண்டு ரூ.5 லட்சம் அளவுக்கு மகசூல் கொடுத்த கரும்பு பயிர், இன்று கண்ணுக்கு எதிரே கருகி கிடக்கிறது. இனி என்ன செய்வது என தெரியவில்லை”. கண்களில் விரியும் கவலையுடன் தன் நிலைமையை விவரித்த பாலன், தான் மட்டுமின்றி இந்த பகுதியின் பெரும்பாலான விவசாயிகளின் இன்றைய நிலைமை இதுதான் என்றார்.

அதே சோழகன்குடிக்காட்டைச் சேர்ந்த விவசாயி சி.நல்லதம்பியின் நிலைமையை அறிந்தபோது, சாகுபடியை முற்றாக இழந்து யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என தெரியாமல் அந்தப் பகுதி விவசாயிகள் தவிப்பதை உணர முடிந்தது.

பொய்த்தது மழை; பொய்த்தது நம்பிக்கை

“5 ஏக்கரில் நெல் சாகுபடி; நேரடி விதைப்பு செய்தேன். முளைத்து வந்த பயிர் தொடர்ந்து உயிர் பிழைக்குமா என்ற நிலை தொடக்கத்திலேயே ஏற்பட்டது. அதன்பிறகு ஒருமுறை ஆற்று நீர் வந்தது. அதில் உயிர் பிழைத்த நெற்பயிர் நன்றாகத்தான் வளர்ந்து வந்தது. ஆனால் அதன்பிறகு ஆற்று நீர் வரவேயில்லை. ஆற்று நீர் வராவிட்டாலும் கூட வடகிழக்கு பருவமழை கொஞ்சம் பெய்தாலும் பயிரைக் காப்பாற்றி விடலாம் என நம்பிக்கையுடன் காத்திருந்தேன்.

எனினும் ஏமாற்றம்தான் மிஞ்சியது. பருவமழை பொய்க்கவே, தண்ணீரின்றி பயிர்கள் கருகத் தொடங்கின. பலவிதமான போராட்டங்களுக்கு இடையே 60 நாட்கள் வரை காப்பாற்றிய பயிரை, அதன்பிறகு காப்பாற்ற என்னிடம் எந்த சக்தியும் இல்லை. பயிர்கள் முழுவதும் அழிந்து இப்போது கால்நடைகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன” என்றார் நல்லதம்பி. அவரது வயல் அருகே வளர்ப்பு மீன் குளம் ஒன்று தண்ணீரின்றி காய்ந்து கிடந்தது. அது குறித்து விசாரித்தபோது, “வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் இதே நிலம்தான், இந்தப் பகுதியில் மழை, வெள்ளம் வந்தாலும் முதலில் பாதிக்கும் நிலமாக உள்ளது. 2009-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இந்தப் பகுதி முழுவதும் நீரில் மூழ்கிக் கிடந்தது. அப்போது நீரில் அழுகி, பயிர்கள் அழிந்து போயின.

மாவட்டத்தின் தலைமடையில் உள்ள கல்லணையைச் சுற்றியுள்ள பகுதியிலேயே வறட்சி கோர தாண்டவம் ஆடுகிறது



ஆண்டுதோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் நிலப்பகுதியாக இருப்பதால், நிலத்தின் ஒரு பகுதியில் குளம் வெட்டி மீன் வளர்க்கலாம் என திட்டமிட்டு, இந்த குளத்தை வெட்டினேன். இப்போது வறட்சியால் நீர் வற்றி வயல் மட்டுமல்ல; இந்தக் குளமும் காய்ந்து கிடக்கிறது. மீன் வளர வேண்டிய குளத்தில் இப்போது மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கின்றன” என்று நல்லதம்பி தனது வேதனையை வெளிப் படுத்தினார்.

“நெல், கரும்பு மட்டுமல்ல: வறட்சியை தாங்கி நிற்கும் தென்னை மரங்கள் கூட பட்டுப் போகின்றன. நிலத்தடி நீர் அந்தளவுக்கு பாதாளத்துக்கு சென்று விட்டது. இந்த பொங்கல் நேரத்தில் வழக்கமாக 2 ஆயிரம் காய் வெட்டும் எனது தோப்பில், இந்த ஆண்டு 500 காய் கூட கிடைக்கவில்லை” என்றார் ஆர்.கண்ணப்பன் என்ற விவசாயி.

பாப்பாநாடு தேநீர் கடையில் ஆவிடநல்ல விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆர்.நாடிமுத்து என்ற விவசாயியை சந்திக்க நேர்ந்தது. “3 ஏக்கர் நெல் நேரடி விதைப்பு செய்தேன். முளைத்த பயிர்கள் கருகி விட்டன. மீண்டும் வயலை உழுதுவிட்டு எள் விதை தெளித்தேன். எள் முளைத்தது. ஆனால் இப்போது அதுவும் இல்லை. வயலில் ஆடு, மாடுகள் மேய்கின்றன. எவ்வளவு நிவாரண நிதி கிடைத்தாலும் எங்களின் வேதனையை தீர்க்க முடியாது.

வேதனையில் உழலும் உழவர்கள்

வழக்கமாக இந்த நேரத்தில் அறுவடைக்கு ஆள் கிடைக்காமல் ஊர் ஊராக அலைந்து ஆள் பிடித்து, அறுவடையை முடித்து, நெல்லை வண்டியில் ஏற்றி, அரசின் நேரடி கொள்முதல் மையங்களுக்கு கொண்டு செல்வோம். அங்கு எங்களுக்கும் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன் நெல்லை கொண்டு வந்தவர்கள் காத்திருப்பார்கள். அவ்வளவு கூட்டத்துக்கு மத்தியில் முட்டி மோதி நெல்லை விற்றுவிட்டு, கையில் பணத்தை வாங்கிக் கொண்டு, அருகேயுள்ள நகரத்துக்கு ஓடி புதுப்பானை, மஞ்சள், கரும்பு, வாழைத்தார் என பொங்கலுக்கான பொருட்களை வாங்கி வந்து உற்சாகமாக உழவர் திருநாளைக் கொண்டாடுவோம்.

இதோ பொங்கல் வந்து விட்டது. ஆனால் வயலில் பயிர் இல்லை. அறுவடையும் இல்லை. நெல் நேரடி கொள்முதல் மையங்களுக்கு வேலையே இல்லை. கையில் காசும் இல்லை. சாகுபடிக்கு வாங்கிய கடனைத் திருப்பித் தர வழியும் இல்லை. கவலையை மறப்பதற்காக ரோட்டு ஓரம் உள்ள டீக்கடையில் இதேபோல் உட்கார்ந்து கொண்டு வருவோர் போவோரை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறோம்” என்று நாடிமுத்து தனது மனதில் உள்ள வேதனையை எல்லாம் வார்த்தைகளாகக் கொட்டினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடைப் பகுதிக ளான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவோணம், பேராவூரணி பகுதிகளில் காணும் இடங்களில் எல்லாம் வறட்சியின் தாக்கம் தெரிகிறது.

“மாவட்டத்தின் தலைமடையில் உள்ள கல்லணையைச் சுற்றியுள்ள பகுதியிலேயே வறட்சி கோர தாண்டவம் ஆடுகிறது” என்கி றார், பாலன் உள்ளிட்ட விவசாயிகளுக்காக வழக்குகளை நடத்தி வரும் வழக்கறிஞர் வெ.ஜீவகுமார். “திருப்பந்துருத்தி அருகே ராஜேஸ்கண்ணா, திருக்காட்டுப்பள்ளி அருகே அரவிந்தன் ஆகிய விவசாயிகள் அதிர்ச்சியாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரை விட்டிருக்கிறார்கள். கல்லணையை திறந்து விட்டால் அடுத்த சில மணி நேரங்களில் வயலில் தண்ணீர் பாயும் அளவுக்கு மாவட்டத்தின் தலைமடையில் இவர்கள் வயல்கள் உள்ளன. இந்த பகுதியிலேயே வறட்சி எனில், மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் நிலைமை எப்படி இருக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை.

ஒரத்தநாடு அருகே சோழகன்குடிக்காட்டில் தனது வயலில் அழிந்து போன நெற்பயிர்களைக் காட்டுகிறார் விவசாயி சி.நல்லதம்பி

நோய்கள் பாதித்தும், முதுமையாலும் உயிரிழப்போரை எல்லாம் விவசாயிகள் மரணம் என்ற பட்டியலில் சேர்ப்பதாக அமைச்சர்கள் சிலர் பேசுகின்றனர். ஆனால் உயிரிழந்த ராஜேஸ் கண்ணாவுக்கு 38 வயது மட்டுமே. அரவிந்தன் 25 வயதைக் கூட தாண்டாதவர். திருப்பனந்தாள் அருகே கீர்த்திகா என்ற பெண் விவசாயி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இளம் விவசாயிகளும், பெண் விவசாயி களும் வறட்சியால் மரணத்தைத் தழுவி யிருக்கும் சூழலில், வறட்சியின் தீவிரத்தை உணராமல், விவசாயிகளின் மரணங்களைக் கொச்சைப்படுத்தும் ஆட்சியாளர்களின் போக்கு மிகவும் வேதனை அளிக்கிறது” என்றார் ஜீவகுமார்.

பன்முனைத் தாக்குதலில் விவசாயிகள்

மேலும் அவர் கூறும்போது, “இந்த நேரத்தில் கடல் போல் காட்சி அளிக்க வேண்டிய கல்லணை, இந்த ஆண்டு கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரிந்த மணல்பரப்பாக சகாரா பாலைவனம் போல் காட்சி தருகிறது.

இந்த சூழலில்தான் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயி, வாங்கிய கடனை எப்படி திருப்பி அடைப்பது என வழி தெரியாமல் தவிக்கிறான். இந்த ஆண்டு கூட்டுறவு வங்கிகளோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளோ விவசாயிகளுக்கு போதிய கடன் வழங்கவில்லை. 90 சதவீதம் பேர் தனியாரிடம்தான் பெரும் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளனர். சாகுபடி முற்றாக அழிந்த நிலையில், வாங்கிய கடனின் அசலும், வட்டியும் சேர்ந்து கழுத்துக்கு மேல் கத்தியாக தொங்குகிறது. ஊரில் சுய மரியாதையோடு வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள் விவசாயிகள்.

பயிர்கள் அழிந்ததை விடவும், வாங்கிய கடனைத் திருப்பித் தர முடியாத அளவு தங்கள் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதை தாங்கிக் கொள்ள இயலாமல்தான் தற்போது அவர்கள் தவிக்கிறார்கள்.

இவ்வளவு மோசமான சூழ்நிலையிலும் கூட, விவசாயிகளுக்கு டிராக்டர் கடன் கொடுத்த தனியார் நிதி நிறுவனங்கள், தீவிரமான கடன் வசூல் நடவடிக்கையில் ஈடுபட்டு, விவசாயி களை மேலும் நெருக்கடிக்கு ஆளாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகவே, நில வரி உள்ளிட்ட அரசு வசூலிக்க வேண்டிய வரியை ரத்து செய்தால் மட்டும் போதாது. அரசு மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் தற்போது விவசாயிகளிடம் எந்த கடன் வசூல் நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது. அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு விவசாயிகள் எதிர்கொள்ளும் பன்முனைத் தாக்குதல்கள் குறித்து அடுக்கடுக்காய் விவரித்தார் ஜீவகுமார்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என புகழப் பட்ட தஞ்சை பூமி, வரலாறு காணாத கடும் வறட் சியால் இன்று தடுமாறி நிற்கிறது. தஞ்சை தரணி யில் உணவு உற்பத்திக்கு கேடு வருமானால், எதிர்காலத்தில் இந்த நாட்டின் உணவு பாதுகாப்புக்கே அது பெரும் கேடாய் முடியும்.

இந்த ஆண்டு வறட்சியானது பண்டைய நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான குளங்களும், குட்டைகளும், ஏரிகளும் மறைந்து விட்டன. இன்னும் மீதம் இருக்கும் ஏரி, குளம், குட்டை, ஆறு, கால்வாய்களையாவது முழு அளவில் தூர்வாரி, சீர்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே பல லட்சம் ஏக்கர் சாகுபடி பூமியையும், இந்த மண்ணை நம்பியிருக்கும் லட்சக்கணக்கான விவசாய குடும்பங்களையும் காப்பாற்ற முடியும்.

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு அருகே வறண்டு கிடக்கும் கிணறு

படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x