

ராணுவத்தில் ஆள் சேர்ப்பு வெளிப்படையாக நடப்பதால் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என்று ராணுவ ஆள்சேர்ப்பு பிரிவு துணை இயக்குநர் ஜெனரல் எஸ்.என்.டால்வி தெரிவித்து உள்ளார்.
ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பதற் கான முகாம்கள் நாடு முழுவதும் நடத்தப்படுகின்றன. சென்னை மண்டலத்துக்குட்பட்ட, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச் சேரியை சேர்ந்தவர்களுக்கு திருவண்ணாமலையில் ஆகஸ்ட் 19 முதல் 31-ம் தேதி வரை முகாம் நடக்கிறது. திருச்சி மண்டலத்துக்குட்பட்ட பெரம் பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, விருது நகர், ராமநாதபுரம், தூத்துக் குடி, நெல்லை, கன்னியாகுமரி, காரைக்காலைச் சேர்ந்தவர் களுக்கு ராமநாதபுரத்தில் ஆகஸ்ட் 19 முதல் 31 வரை முகாம் நடக்கிறது.
கோவை மண்டலத்துக்குட்பட்ட கோவை, திண்டுக்கல், நீலகிரி, சேலம், மதுரை, ஈரோடு, தருமபுரி, தேனி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூரைச் சேர்ந்தவர்களுக்கு மதுரையில் நவம்பர் 11 முதல் 20 வரை முகாம் நடக்கிறது.
இது தொடர்பாக, தமிழகம், ஆந்திர, தெலங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபர் பகுதி ராணுவ ஆள் சேர்ப்பு பிரிவு துணை இயக்குநர் ஜெனரல் பிரிகேடியர் எஸ்.என்.டால்வி நேற்று கூறியதாவது:
தமிழகத்தில் இருந்து ராணுவத் தில் சேரும் இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதற்கு போதிய விழிப்புணர்வு இல்லாததே காரணம். ராணுவத்தில் ஜவானாக சேர்பவர்களுக்கு மாத ஊதியம் ரூ.35 ஆயிரம் வரை கிடைக்கும். அவர்கள் பணியாற்றும் இடத்தை பொறுத்து கூடுதல் படியுடன் ரூ.52 ஆயிரம் வரை கிடைக்கும். 17 வயதில் பணியில் சேர்பவர்களுக் கான ஊதியம் இது. இதை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தற்போது ராணுவத்தில் படை வீரர், தொழில்நுட்ப பிரிவு என 2ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றுக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இப் பணியிடங்களுக்கு ‘>joinindianarmy.nic.in’ என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். தேர் வுக்கு 45 நாட்கள் முன்னதாக அறிவி்ப்பு வெளியாகும். முகா முக்கு 15 நாட்கள் முன் வரை விண்ணப்பிக்கலாம். தகுதி யானவர்களுக்கு சேர்க்கை அட்டை வழங்கப்படும்.
தொடர்ந்து உடல் தகுதித் தேர்வில், 1.6 கி.மீ தூரத்தை 5.40 நிமிடங்களில் ஓடிக் கடக்க வேண்டும். தொடர்ந்து புல் அப்ஸ் எனும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இளைஞர்கள் போதிய பயிற்சி செய்யாமல், உடல் தகுதித்தேர்வுக்கு வரும்போது பாதிப்புகளை சந்திக்கின்றனர். எனவே, முறையாக பயிற்சி செய்த பின்னரே, முகாமில் பங்கேற்க வரவேண்டும். உடல் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, எழுத்து தேர்வு கள் நடத்தப்படும். எழுத்துத் தேர்வை பொறுத்தவரை, இந்தி, ஆங்கிலத்தில், சிபிஎஸ்இ முறைப்படி கேள்விகள் கேட்கப் படுகின்றன.
தமிழ் உட்பட மாநில மொழிகளில் தேர்வு நடத்துவது தொடர்பான எந்த அறிவிப்பும் இதுவரை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து வரவில்லை. எனவே, இந்த முறை இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும்.
ராணுவத்தில் ஆள் சேர்ப்பு பணி என்பது வெளிப்படையாக நடத்தப்படுகிறது. இதில், இடைத் தரகர்கள் லட்சக்கணக்கில் பணம் பெற்று பணி வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறினால் நம்ப வேண்டாம். இளைஞர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்து முகாமில் பங்கேற்கலாம். மேலும், இளைஞர்கள் கல்வித்தகுதி, உடல் திறன் தகுதி தொடர்பான தகவல்களை முழுமையாக தெரிந்து கொண்டு, தங்களுக்கு போதுமான தகுதி இருந்தால் பங்கேற்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.