

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவை அவமதிக்கும் அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதித்துறையின் மாண்பினைக் காக்க வேண்டுமென வலியுறுத்தி திமுக வழக்கறிஞர் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
தி.மு.க. வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (11.10.2014) சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் அண்ணா அறிவாலயத்திலுள்ள கழக அலுவலகத்தில், கழக அமைப்புச் செயலாளர்-சட்டத் துறைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதல் தீர்மானத்தில், "ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா வழங்கிய உன்னதமான தீர்ப்பை அவமதிப்புக்குள்ளாக்கும் வகையிலும், நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை தனிப்பட்ட முறையில் மதம், மொழி, இனம் அடிப்படையில் இரண்டு பிரிவுகளுக்கு இடையேயும், இரு மாநிலங்களுக்கு இடையே தற்போது நிலவி வரும் நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதித்துறையின் மாண்பினைக் காக்க வேண்டுமென இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.