

திருப்பூரில் டாஸ்மாக் மதுக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினருக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரவித்துள்ளனர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்:
திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன.
இதனை எதிர்த்து போராட்டம் நடத்தினால் காவல் துறையை வைத்து அராஜகத்தை கட்டவிழ்த்து விடும் அதிமுக அரசின் இரட்டை வேடம் வேதனை அளிக்கிறது. சமூகத்தின் மீது இந்த அரசுக்கு இருக்கும் அலட்சியப் போக்கையே இது காட்டுகிறது.
திருப்பூர் சாமளாபுரத்தில் போராடிய பெண்கள் மீது காவல் துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அப்போது ஒரு பெண்ணை காவல்துறை கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் அடித்துள்ளார்.
எனவே, அவரை உடனடியாக தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும். பெண்ணை தாக்கியவர் காவல் துறையில் பணியாற்ற தகுதியற்றவர் என்ற அடிப்படையில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி:
காவல்துறையினரின் தடியடிக்கு நீதி கேட்ட பெண்களில் ஒருவரை திருப்பூர் நகர காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டி யராஜன் என்பவர் கொடூரமான முறையில் கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளார். மேலும் பல பெண்களும் தாக்கப்பட்டிருக் கின்றனர்.
காவல்துறையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. பெண்களை கண்மூடித்தனமாக தாக்கிய திருப்பூர் நகர கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மீது மகளிர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:
மக்கள் கோரிக்கையை ஏற் பதை விட்டுவிட்டு அவர்கள் மீது, குறிப்பாக பெண்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தியுள் ளனர். பெண்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்:
சாமளாபுரத்தில் பெண்கள் மீது தடியடி நடத்த உத்தரவிட்ட ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மற்றும் மக்கள் மீது வன்முறையை ஏவிய காவலர்கள் மீது தமிழக டிஜிபி, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தாக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து சம்பந்தப்பட்ட காவலர்கள் மன்னிப்பு கேட்கவேண்டும். காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் தேமுதிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி:
பெண் களைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் மதுக்கடை திறக்கக்கூடாது.