

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் வேங்கை ஐ.பிரகாஷ் ராஜ் மனு தாக்கல் செய்துள்ளார். “விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டது,
உடுமலைப்பேட்டை காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பெண் சித்திரவதை செய்யப்பட்டது, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் ராமநாதபுரம் காவல் நிலை யத்தில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது என காவல் நிலையத்தில் நடைபெறும் சம்பவங்கள் தொடர்பாக தொடர்ந்து பல செய்திகள் வருகின்றன.
வங்கிகள், ஏ.டி.எம். மையங்கள் போன்ற இடங்களில் தேவையற்ற நிகழ்வுகள் நடைபெறுவதை தடுப்பதற்காக அங்கெல்லாம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும்படி காவல் துறையினர் வற்புறுத்தி வருகின்றனர்.
அதேபோல் காவல் நிலையங்களில் நடைபெறும் தேவையற்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில், அங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது அவசியமாகிறது. ஆகவே, இதற்கான உத்தரவை அரசுக்கு நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும்” என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இதேபோல் `மாற்றம் இந்தியா’ என்ற அமைப்பின் இயக்குநர் ஏ.நாராயணன் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த மனுக்கள் தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை டிசம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.