Published : 25 Oct 2013 12:39 PM
Last Updated : 25 Oct 2013 12:39 PM

தமிழகம் மிக விரைவில் மின் மிகை மாநிலமாகும்: ஜெயலலிதா

பெரும்பாலான நாட்களில் வீட்டு உபயோகத்திற்கான மின்வெட்டே இல்லை என்பதுதான் யதார்த்த நிலை என்ற முதல்வர் ஜெயலலிதா, மிக விரைவில், இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக ஆக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழகத்தின் மின் பிரச்சினை தொடர்பாக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்துப் பேசியது:

"தற்போது பேசிய உறுப்பினர்கள் பாலபாரதியும், ஆறுமுகமும் தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு நிலைமை பற்றி இங்கே குறிப்பிட்டார்கள். இதனால், சிறு, குறு தொழில்கள் நடத்துபவர்கள் பாதிக்கப்படுவதாக தற்போது குறிப்பிட்டார்கள்.

இன்றைய நிலைமையில் மின்வெட்டு குறித்து கவலைப்படக்கூடிய எந்தச் சூழ்நிலையும் இல்லை என்பதை ஆரம்பத்திலேயே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

கண்ணால் பார்க்க முடியாத மின்சாரத்தை அதன் செயல்பாடுகளில் இருந்து உணருவது போல், மின் உற்பத்தியைப் பெருக்க, தமிழகத்தை மின் மிகை மாநிலமாக்க நான் எடுத்து வரும் துரித நடவடிக்கைகளை கண்ணால் காண முடியாவிட்டாலும், தற்போதைய சீரான மின் விநியோகத்தின் மூலம் தமிழக மக்கள் எளிதில் உணர்ந்து இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் அக்கறையின்மை, தொலைநோக்கற்ற பார்வை, நிர்வாகத் திறமையின்மை காரணமாக, ஒளிமயமாக இருந்த தமிழகம் இருளில் மூழ்கியது.

நான் மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், தமிழகத்தின் மின் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்தேன். மின் பற்றாக்குறையை நீக்க எனது தலைமையிலான அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் நான் இந்த மாமன்றத்தில் பல முறை விரிவாக எடுத்துரைத்து இருக்கிறேன்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை போக்கப்படும் என்றும் நான் தெரிவித்து இருந்தேன். 600 மெகாவாட் திறன் கொண்ட மேட்டூர் அனல் மின் திட்டப் பணிகளைப் பொறுத்த வரையில், முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சிக் காலமான ஐந்து ஆண்டு காலத்தில் 55 விழுக்காடு பணிகளே முடிக்கப்பட்டிருந்தது. நான் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்தத் திட்டத்தினை விரைவுபடுத்தியதன் காரணமாக, தற்போது இந்தத் திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, இதிலிருந்து தற்போது நமக்கு தொடர்ந்து 500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.

புதிய அனல் மின் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உற்பத்தியைத் தொடங்கியுள்ளதால் தற்போது கூடுதலாக 1700 மெகாவாட் மின்சாரம் நமக்கு கிடைத்து வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியமும், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து தூத்துக்குடியில் அமைத்து வரும் 2X500 மெகாவாட் அனல் மின் திட்டப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இது தவிர மத்திய கால அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு 500 மெகாவாட் மின்சாரம் இந்த ஆண்டு ஜுன் மாதம் முதல் பிற மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்பட்டு பெறப்பட்டு வருகின்றது.

இந்த ஆண்டு தென் மேற்கு பருவ மழை சிறப்பாக பெய்த காரணத்தால் நீர்மின் உற்பத்தி நிலையங்களைச் சார்ந்த நீர்த் தேக்கங்கள் ஏறத்தாழ முழு கொள்ளளவு நிலையை எட்டியுள்ளன. வருகின்ற வட கிழக்கு பருவ மழையும் நன்றாகவே அமையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தக் காரணங்களாலும் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில் 180 மில்லியன் யூனிட்டுகளாக இருந்து வந்த தினசரி மின் வினியோகம், இந்த ஆண்டு அதிகபட்சமாக 270 மில்லியன் யூனிட்டுகளை எட்டியுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் முதல் நாள் அன்று இதுவரை இல்லாத உச்ச தேவையான 12,118 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் நிறைவு செய்தது என்பதை இந்தத் தருணத்தில் குறிப்பிட விரும்புகிறேன்.

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு 15.6.2013 முதல் தினசரி 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நிகழும் மின்வெட்டு படிப்படியாக தளர்த்தப்படும் என்று நான் ஏற்கெனவே அறிவித்திருந்ததற்கு ஏற்ப, 1.10.2013 முதல் உயரழுத்த தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்வெட்டு, உச்சத் தேவையான மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையுள்ள நேரம் நீங்கலாக, இதர நேரங்களில் 40 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டு உபயோகத்திற்கான மின்வெட்டு சென்னையில் இரண்டு மணி நேரம் என்றும், இதர பகுதிகளில் மூன்று மணி நேரம் என்றும் இருந்தாலும், பெரும்பாலான நாட்களில் மின்வெட்டே இல்லை என்பது தான் யதார்த்த நிலை. அதாவது, முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு என்றிருந்த நிலை மாறி, தற்போது அறிவிக்கப்பட்ட மின்வெட்டும் நடைமுறைப்படுத்தாத நிலை ஏற்பட்டுள்ளது.

எங்களைப் பொறுத்த வரையில், மோசமான நிலையை சீர்செய்து இருக்கிறோம். இப்போது ஒரு எச்சரிக்கை உணர்வுடன், நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வாக்குறுதி கொடுத்துவிட்டு தவறிவிடக்கூடாது என்பதற்காக, மின்வெட்டு இருக்கும் என்று சொல்கிறோம். ஆனால் மின்வெட்டே இல்லாமல் மின்சாரத்தை கொடுத்துக் கொண்டு இருக்கிறோம்.

நான் ஏற்கெனவே அறிவித்ததற்கேற்ப, தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு விரைவில் முழுமையாக நீங்கி, தங்கு தடையின்றி அனைத்து தரப்பு நுகர்வோர்களுக்கும் மின்சாரம் கிடைக்கப் பெறும். வெகு விரைவில், மிக விரைவில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக ஆக்கப்படும் என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அதை சாதித்தே தீருவோம்.

இதையே கடந்த ஆண்டு சாதித்தே தீருவோம் என்று நான் பேசியபோது, எப்படி செய்யப் போகிறார்கள் என்று எல்லோரும் நகைத்தார்கள். இப்போது சாதித்தே தீருவோம் என்றால் எல்லோரும் நம்புகிறார்கள் என்றால் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் சாதித்து விட்டோம். இன்னும் ஒரு சதவிகிதம்தான். இந்த ஆண்டு இறுதிக்குள் அதையும் சாதித்துவிடுவோம்.

ஆகவே நான் எடுத்துள்ள இந்த நடவடிக்கைகள் நமக்குத் தேவையான மின்சாரம் விரைந்து கிடைக்கவும், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிலைமை மேம்படவும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, உறுப்பினர்கள் பாலபாரதி, ஆறுமுகம் மற்றும் மற்ற உறுப்பினர்களும் சிறு, குறு தொழிலாளர்களின் நிலைமை என்னவாகும், சிறு, குறு தொழில்கள் நடத்துவோரின் நிலைமை என்னவாகும் என்று கவலை கொள்ளத் தேவையில்லை.

எல்லோருக்கும் 24 மணி நேரமும் சீரான மின்சாரம் கிடைக்கும்படியான ஒரு சூழ்நிலையை வெகு விரைவில் உருவாக்கிக் காட்டுவோம் என்று தெரிவித்துக் கொண்டு அமர்கிறேன்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x