

தமிழக வனத் துறை சார்பில் யானைகள் புத்துணர்வு முகாம் வனத் துறையின் யானைகள் வளர்ப்பு மையங்களில் நேற்று முன்தினம் தொடங்கின. 30 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், வளர்ப்பு யானைகளுக்கு ஓய்வு வழங்குவதுடன், வழக்கமான உணவுடன், ஊட்டச்சத்து மிக்க உணவும், ஆயுர்வேத மருந்துகளும் வழங்கப்படுகின்றன.
இதையொட்டி, கோவை சாடிவயல் யானைகள் முகாமில் உள்ள பாரி, சுஜய் ஆகிய 2 கும்கி யானைகளுக்கு நேற்று பூஜை நடத்தி, பொங்கல் வழங்கினர். மேலும், கடந்த வாரம் வனத்தில் பிடிபட்ட 3 வயது குட்டி யானையும் புத்துணர்வு முகாமில் பங்கேற்றுள்ளது.
முகாம் தொடக்க விழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்காத நிலையில், வனத் துறை பணியாளர்களே யானைகளுக்கு வாழை, ஆப்பிள், ஆரஞ்சு, தர்பூசணி, களி, சூரணம் வழங்கி, விழாவைத் தொடங்கிவைத்தனர்.
இரு மாதங்களுக்கு முன் காட்டுயானைகள் தாக்கியதில் தந்தம் இழந்த சுஜய் யானை, ஏற்கெனவே இந்த முகாமில் உள்ள பாரி யானையுடன் இணக்கமான இருக்கவில்லை. இதனால் சுஜய் யானையை முதுமலைக்கு கொண்டுசெல்ல முடிவு செய்தனர். எனினும், அதற்கான உத்தரவு வரவில்லை.
இதையடுத்து, நேற்று சுஜய்க்கு முகாமில் உள்ள யானைகள் சமையல் கூடம் அருகே பூஜை செய்து, உணவு வழங்கினர்.
முரட்டுத்தனம் கொண்ட பாரி யானை சுஜய்யை தாக்க முற்படும் என்பதால், இரு யானைகளையும் சுமார் 100 மீட்டர் இடைவெளியில் வைத்துள்ளனர். தற்போது பாரிக்கு மதம் பிடித்துள்ளதுபோல இருப்பதால், பாகன்கள் குடியிருப்புக்கு அருகில் சங்கிலியால் பிணைத்துள்ளனர். அதை எச்சரிக்கையுடன் நெருங்கி உணவு வழங்குகின்றனர் வன ஊழியர்கள்.
இவைதவிர, கடந்த வாரம் பிடிபட்ட 3 வயது குட்டியானைக்கும் உணவு வழங்கப்பட்டது. கோவை பெரியதடாகம் பகுதியில் தாயுடன் சுற்றிவந்த இந்த ஆண் குட்டியானை, வாயில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இயற்கை உணவை சாப்பிடமுடியவில்லை. இதனால், பரிதவித்த இந்த யானை குடியிருப்புக்குள் புகுந்து, மாவு, அரிசி உள்ளிட்டவற்றை சாப்பிட்டது. எனவே அதைப் பிடித்து, உரிய சிகிச்சை அளிக்க வனத் துறையினர் முடிவுசெய்தனர்.
அதன்படி ஒரு வீட்டில் புகுந்த யானையைப் பிடித்து, சாடிவயல் முகாமுக்கு கொண்டுவந்து சிகிச்சை அளிக்கின்றனர். தற்போது அந்த யானைக்கு வாய் புண் ஓரளவு சரியாகிவிட்டதாக பாகன்கள் தெரிவித்தனர்.
எனினும், வன ஊழியர்கள் அதற்கு பழம் கொடுக்க முயன்றபோது, சீற்றத்துடன் பிளிறியது. தும்பிக்கையால் மண்ணை அள்ளி, பாகன்களை நோக்கிவீசியது. பின்னர் பாகன்களை அதை ஆசுவாசப்படுத்தி, பழங்களை வழங்கினர்.
இதுகுறித்து பாகனங்கள் மற்றும் வனத் துறையினர் கூறும்போது, “பன்றியைக் கொல்லப் பயன்படுத்தப்படும் வெடிக்காயால் இந்த யானை வாயில் புண் ஏற்படவில்லை. கரும்பு, மூங்கில் குருத்துகளை சாப்பிடும்போது அதன் குச்சி பற்களில் பட்டு யானைக்கு புண் ஏற்பட்டு, கீழ் தாடை வரை பரவும். அப்படித்தான் இதற்கும் புண் ஏற்பட்டுள்ளது.
தற்போது 90 சதவீதம் குணப்படுத்திவிட்டோம். இன்னும் சில நாட்களில் முழுமையாக குணமடைந்துவிடும். பின்னர், மேலிட உத்தரவுக்குப் பிறகு யானைக் கூட்டத்துடன் சேர்த்துவிடுவோம். அதுவரை மற்ற யானைகளுக்கு கொடுக்கப்படும் உணவு, மருந்து ஆகியவை இந்த யானைக்கும் கொடுக்கப்படும்” என்றனர்.
எனினும், இந்த யானையை கும்கியாக மாற்றுவதற்காக வனத் துறையினர் பிடித்துவைத்துள்ளதாக வன உயிரின ஆர்வலர்கள் சிலர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “ஏற்கெனவே சாடிவயல் முகாமுக்கு கொண்டுவரப்பட்ட நஞ்சன் யானை இறந்துவிட்டது. அதற்குப்பிறகு பாரிக்கு துணையாக தருவிக்கப்பட்ட சுஜய் யானை இணக்கமாக இல்லை. மேலும், பாரியைப்போல ஊக்கம் மிக்கதாகவும் சுஜய் இல்லை. காட்டு யானைகள் அதை தாக்கி, தந்தத்தை உடைத்து விட்டன. எனவே, காட்டுயானைகளை விரட்ட பாரி மட்டுமே பயன்படுகிறது.
இதற்கு மாற்றாக முதுமலை அல்லது டாப்சிலிப்பில் இருந்து பழக்கப்படுத்தப்பட்ட யானையைக் கொண்டுவர வேண்டிய நிலை உள்ளது. தற்போது பிடிபட்ட யானை ஆரோக்கியமாகவும், பழக்குவதற்கு எளிதாகவும் இருப்பதால், இதை கும்கியாக மாற்ற அவர்கள் திட்டமிட்டிருக்கலாம்” என்றனர்.
இந்த குட்டியானை அய்யாசாமி என்பவர் வீட்டில் நுழைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது பிடிபட்டதால், அதை முன்பு அய்யாசாமி என்று அழைத்தனர். ஆனால், தற்போது அதை வனத் துறையினரும், பாகன்களும் ‘ஜம்போ’ என்று பெயரிட்டுள்ளனர்.