Published : 16 Oct 2014 09:37 am

Updated : 16 Oct 2014 09:37 am

 

Published : 16 Oct 2014 09:37 AM
Last Updated : 16 Oct 2014 09:37 AM

நோபல் பரிசிலும் ஆணாதிக்கமா?

உலகின் மகத்தான சாதனைகளுக்குப் பின்னரும் பெண்கள் அங்கீகாரம் கோரி நிற்கின்றனர்.

பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனை புரிந்துவருகிறார்கள்’ என்ற வாசகம் பழசாகி பல காலம் ஆகி விட்டது. எனினும், பெண்களின் சாதனைகளுக்கான அங்கீகாரம் முழுமையாக வழங்கப்பட்டிருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, 1901-ம் ஆண்டு முதல் இதுவரை 860 தனிநபர்களுக்கும், 25 நிறுவனங்களுக்கும் நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் பெண்களுக்கு வழங்கப்பட்ட விருதுகளின் எண்ணிக்கை, மலாலாவையும் சேர்த்து 47-தான். 1903-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசையும், 1911-ல் வேதியியலுக்கான நோபல் பரிசையும் மேரி கியூரி வென்றதைக் கணக்கில் கொண்டால் இதுவரை 46 பெண்கள்தான் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் கவனம் சிதறாத சிந்தனை, தேர்ந் தெடுத்த துறையில் நல்ல தேர்ச்சி, பணியில் சிரத்தை, ஆய்வுக்கான தெளிவு, தன்னம்பிக்கை, பொறுமை என்று எல்லாத் தகுதிகளாலும் பெண்கள் தங்களை நிரூபித்துக் காட்டியுள்ளனர். அப்படியிருக்க விருதுகள் அவர்களை அங்கீகரிக்காததற்கு என்ன காரணம்?

கணவருக்காகக் கைவிடுதல்

அமெரிக்காவில் இருக்கும் 75% இயற்பியல் நிபுணர்களின் துணைவியரும் விஞ்ஞானிகள்தான் என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆராய்ச்சி நிலையங்களில் சந்தித்து, காதல் கொண்டு திருமண பந்தத்துக்குள் நுழைந்த அறிவியல் தம்பதிகள் ஏராளம். ஆனால், மண வாழ்க்கையில் புகுந்த பின்னர், அந்தப் பெண்கள் முன்னதாக மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைக் கைவிட்டு, தங்கள் கணவர்களின் ஆராய்ச்சிகளுக்கு உதவியாளர்களாக மாறிவிடுகின்றனர். இதனால், அவர்களது தனித்தன்மை பாதிக்கப்படுகிறது. இந்தப் போக்கு அமெரிக்க அறிவியல் துறையைக் கலக்கமடையச் செய்துள்ளது. மருத்துவத் துறைக்காக நோபல் பரிசை வென்ற ரோஸலின் யாலோ, “மனித சமுதாயத்துக்குத் தீர்வு காணாத பிரச்சினைகள் பல இருந்தும், மக்கள்தொகையில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் திறமை ஏன் இப்படி வீணடிக்கப்படுகிறது என்று தெரியவில்லை?” என்று குறிப்பிட்டார்.

கசப்பான நிகழ்வுகள்

நோபல் பரிசு தீர்மானங்களில் அல்லது தேர்வுகளில் பல்வேறு விசித்திரங்களும் கசப்பான நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. ஆஸ்திரியா - ஹங்கேரியைச் சேர்ந்த கெர்ட்டி கோரி என்ற பெண் சர்க்கரைப் பொருளின் குணநலன்களை ஆராய்ந்ததற்காக 1947-ல் நோபல் பரிசை வென்றார். அதற்குப் பின்னர் தான், கல்லூரிப் பேராசிரியை பதவி அவருக்கு வழங் கப்பட்டது. காரணம் அப்போதைய சட்டத்தின் கீழ் பெண்களுக்கு அந்த உரிமை கிடையாது. இதே அனுபவம்தான் கெர்ட்ரூட் எலியான் என்ற நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானிக்கும் ஏற்பட்டது. அவருக்குப் பேராசிரியைப் பதவிக்குப் பதிலாக உதவிச் செயலர் பொறுப்புதான் அளிக்கப்பட்டது.

இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற இத்தாலியைச் சேர்ந்த ரீத்தா லேவி-மான்தெல்சினியின் கதை இன்னும் மோசம். விருதுக்குப் பிறகு இவருக்குப் பல்கலைக்கழக பொறுப்பு அளிக்கப்பட்டது. எனினும், இந்தப் பதவியால் பொறுப்புள்ள மனைவியாகவோ, தாயாகவோ செயல்பட முடியாது என்று காரணம்காட்டி, தேடிவந்த பதவியைத் தடுத்து நிறுத்திவிட்டார் இவரது தந்தை.

அமெரிக்காவில் வசித்த ஜெர்மானியரான மரியா கபர்ட் மேயர் என்ற இயற்பியல் நோபல் விஞ்ஞானிக்கு, பேராசிரியர் பதவியைப் பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்துவிட்டது. காரணம் அமெரிக்காவில் அப்போதிருந்த சட்டம். ஏற்கெனவே கணவர் பொறுப் பான பதவியில் இருந்தால், அவரது மனைவிக்கு அங்கு இடமில்லை என்று அந்தச் சட்டம் கூறியது. கட்டுப்பெட்டித்தனமான இந்தச் சட்டம் பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் 1972-ம் ஆண்டு வரை அமலில் இருந்துவந்தது. 1964-ல் பிரிட்டிஷ் பெண்மணி டோரதி ஹாட்கின் வேதியியல் துறைக்காக நோபல் பரிசைப் பெற்றபோது, சில ஆங்கில பத்திரிகைகளின் தலைப்புச் செய்தி என்ன தெரியுமா? ‘குடும்பத் தலைவிக்கு நோபல் பரிசு’ என்பதுதான்.

புறக்கணிக்கப்பட்ட பெண்கள்

‘அணு வேதியியலின் தந்தை’ என்று அழைக்கப்படும் ஓட்டோ ஹான் என்ற ஜெர்மானியருக்கு வேதியியலுக் கான நோபல் பரிசு 1944-ல் வழங்கப்பட்டது. ஆனால், ஓட்டோ ஹானின் கண்டுபிடிப்புக்கு மிகவும் அடிப்படையாக இருந்த லீஸா மெய்ட்னார் என்ற பெண்ணின் 30 ஆண்டு உழைப்பை உலகம் கண்டு கொள்ளவேயில்லை. பரிசும் புகழும் ஓட்டோ ஹானுக்கு மட்டுமே கிடைத்தன.

அயர்லாந்தைச் சேர்ந்த ஜோசிலின் பெல் பர்னெல் என்ற இளம் வயது (அப்போது 25 வயது) பெண் விஞ் ஞானிக்கு இழைக்கப்பட்டதுதான் உச்சகட்ட துரோகம். முதுகலை மாணவியாக இருந்த அவர், ‘பல்சார்’ என்ற விண்பொருளின் கண்டுபிடிப்புக்காகக் கடுமையாக உழைத்தவர். பல்சாரை முதன்முதலாகக் கண்டறிந்ததும் இவர்தான். ஆனால், ஆராய்ச்சிக் குழுவில் இருந்த ஆன்டனி ஹெவிஸ் மற்றும் மார்ட்டின் ரைல் ஆகிய இருவருக்கும்தான் நோபல் வழங்கப்பட்டது.

டி.என்.ஏ. அமைப்பைக் கண்டுபிடித்ததற்காக கிரிக், வாட்சன், வில்கின்ஸ் ஆகிய மூவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் 1962-ல் வழங்கப்பட்டது. ஆனால், ரோஸலின்ட் பிராங்க்ளின் என்ற பெண் கண்டறிந்த விஷயங்கள்தான் மேற்கண்ட மூவரின் கண்டுபிடிப்புக்கும் அடிப்படை. ரோஸலின்டின் புகழ் பரவுவதற்கு முன்னதாகவே புற்றுநோயால் பாதிக்கப்பெற்று 1958-ல் அவர் காலமானார். விருது நிகழ்ச்சியில் நோபல் கமிட்டியினர் ரோஸலின்டின் சேவைகளை நினைவுகூர்ந்தனர். ஆனால், பரிசு பெற்ற அந்த மூவரும் ரோஸலின்ட் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

சாதனை கதை

ஆணாதிக்கம், சட்டதிட்ட இடையூறு, சமுதாயக் குறைபாடு, நோபல் கமிட்டியின் ஒரவஞ்சனை எனப் பல தடைகள் இருந்தாலும் அவற்றை மறக்கடிக்கும் வகையில் ஒரு கதை நோபல் வரலாற்றில் உண்டு. அதுதான் மேரி கியூரியின் பெரும் சாதனை. இருவேறு அறிவியல் துறைகளுக்காக விருது பெற்ற இவரது சாதனை இன்னும் முறியடிக்கப்படவே இல்லை.

சாதனை முறியடிப்பு இருக்கட்டும். பெண்களின் உழைப்பை தற்போதாவது நோபல் கமிட்டி உணர் கிறதா? அவர்களை முறையாக ஏற்றுக்கொண்டு உரிய மரியாதையைத் தருகிறதா? இந்தக் கேள்விக்கு சிறு ஆறுதல் தரும் ஒரு தகவல்:

2000-த்துக்குப் பிறகு 17 பெண்களுக்கு வெவ்வேறு துறைகளில் நோபல் வழங்கப்பட்டிருக்கிறது.

-பி. சௌந்தரராஜன், தலைவர், அஞ்சல்தலை சேகரிப்போர் சங்கம், திருச்சி,

தொடர்புக்கு: sounderr2000@gmail.com


நோபல் பரிசுமலாலாபெண்களுக்கு நோபல் பரிசுஆணாதிக்கம்

You May Like

More From This Category

More From this Author