Published : 12 Jun 2017 09:32 PM
Last Updated : 12 Jun 2017 09:32 PM

வீடுகளுக்கு ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டம் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்: அமைச்சர் தங்கமணி

பொதுமக்களின் வசதிக்காக தாழ்வழுத்த வீடு மற்றும் வணிக உபயோகத்திற்கு ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டம் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

'மின்சார நண்பன்' என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மத்திய அரசின் மின்துறை அமைச்சகத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மின்நுகர்வோருக்கு அவர்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள, ஏற்பட உள்ள மின் பராமரிப்பு பணிகள் குறித்த தகவல்கள் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் தெரிவிக்கப்படும்.

இதற்காக ஒரு கோடியே 60 லட்சம் மின்நுகர்வோரின் தகவல்கள் இதற்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஊரக மின்மயமாக்கல் கழகத்தின் கணினி சேவை மையத்தின் மூலம் மின்தடை குறித்த தகவல் சம்பந்தப்பட்ட பகுதியில் பதிவு செய்யப்பட்ட அனைத்து மின்நுகர்வோரின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

மேலும், பொதுமக்களின் வசதிக்காக தாழ்வழுத்த வீடு மற்றும் வணிக உபயோகத்திற்கு ஒரே நாளில் மின் இணைப்பு வழங்கும் திட்டம் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் மின்இணைப்பு கோரும் வீட்டுக் கட்டிடங்கள் மற்றும் வணிக கட்டிடங்கள் மின்வாரியத்தின் மின்கம்பம் அல்லது மின்பகிர்மான பெட்டியிலிருந்து 100 அடிக்குள் இருந்தால் விண்ணப்பம் அளித்த அதே நாளில் மின்இணைப்பு கொடுக்கப்படும். மின்இணைப்பு கோரும் வீடு மற்றும் வணிக இடமானது புதைவடம் (கேபிள்) இருக்கும் பகுதியில் அமைந்திருந்தால் விண்ணப்பம் அளித்த 48 மணி நேரத்துக்குள் மின்இணைப்பு வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் www.tangedco.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது சம்மந்தப்பட்ட பிரிவு அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இணைதளம் வாயிலாக விண்ணப்பிக்கும் போது கட்டணங்களையும் இணையதளம் வாயிலாக செலுத்தலாம்.

இவ்வாறு தங்கமணி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x