

கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்தும், வருமான வரித்துறை கைப்பற்றியுள்ள ஆவணங்களில் இடம்பெற்றுள்ள முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் புது வண்ணாரப்பேட்டையில் நேற்று திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் அதிமுகவின் இரு அணிகளும் வரலாறு காணாத அளவில் பணத்தை வாரி இரைத்தனர். ரூ.89 கோடி விநியோகம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பலரது பெயரும் இடம்பெற்றுள்ளன. இதன் அடிப்படையில்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, இதற்கு காரணமான முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்ய வேண்டும். ஆளுநர் அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
அமைச்சர் விஜயபாஸ்கர் ஊழல் செய்தது, வருமான வரித்துறை சோதனையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதும், அவர் ஊழல் செய்துள்ளார். எனவே, ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும் விரைவில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும் காலம் வரும். பாஜக தயவால் அவரால் நீண்ட காலத்துக்கு தப்பித்துக் கொள்ள முடியாது.
கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும், ஒட்டுமொத்தமாக பொதுத்தேர்தல் நடந்தாலும் திமுகவே வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் பேசும்போது, “அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் ரத்துக்கு காரணம் தேடி இந்த சோதனை நடத்தப்பட்டதா? என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.” என்றார்.
இந்த கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.