

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமாரிடம் கையெழுத்துப் பெற்று அதை ஏற்கெனவே சூளைமேடு மேன்சனில் தங்கியிருந்தபோது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க, ராம்குமாரிடம் கையெழுத்து மாதிரி சோதனை நடத்த எழும்பூர் 14-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தனியாக மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று குற்றவியல் நடுவர் (பொறுப்பு) கோபிநாதன் முன்பு நடந்தது. இதற்காக புழல் சிறையில் இருந்து ராம்குமார் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராமராஜன், ராம்குமார் மீண்டும் அரசு தரப்பு கோரும் ஆவணங்களில் கையெழுத்திட வேண்டிய அவசியம் இல்லை என வாதிட்டார். அதற்கு அரசு உதவி வழக்கறிஞர் ஆர்.கொளஞ்சிநாதன், ‘‘ ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபரின் கையெழுத்து, மற்ற சாட்சி ஆதாரங்களுடன் ஒத்துப்போகிறதா என்பதை பரிசோதிக்க முழு உரிமை போலீஸாருக்கு உள்ளது’’ என்றார். அப்போது குற்றவியல் நடுவர் குறுக்கிட்டு ராம்குமாரிடம் நீதிமன்ற ஆவணங்களில் கையெழுத்திடக் கூறினார். அதற்கு ராம்குமார் கையெழுத்திட மாட்டேன் என மறுப்பு தெரிவித்தார். அதையடுத்து அரசு உதவி வழக்கறிஞர், சரி நீங்கள் கூறுவதை அப்படியே எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுங்கள்’’ எனக் கூறியதும் ‘‘நான் கையெழுத்திட விரும்பவில்லை’’ எனக் கூறி நீதிமன்ற ஆவணங்களில் கைப்பட எழுதிக் கொடுத்த ராம்குமார் அதில் கையெழுத்தும் போட்டார். பின்னர் குற்றவியல் நடுவர், மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
போலீஸ் தரப்பில், ‘‘சூளைமேடு மேன்சனில் தங்கியிருந்தபோது ராம்குமார் போட்டுக் கொடுத்த கையெழுத்தும், தற்போது ராம்குமார் போட்டுக் கொடுத்த கையெழுத்தும் ஒன்றிப்போகிறதா என்பதை அவர் கையெழுத்து போட்டதையே ஆதாரமாக தடயவியல் சோதனைக்கு அனுப்பி குற்றச்சாட்டை உறுதி செய்வோம்’’ என்றனர்.