Published : 10 Jun 2017 05:07 PM
Last Updated : 10 Jun 2017 05:07 PM

மலேசிய அரசுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

வைகோ விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் என்று மலேசிய அரசு அவரை நாட்டுக்குள் செல்ல அனுமதி மறுத்த விவகாரத்துக்கு திருமாவளவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான அறிக்கை:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மலேசியாவில் பினாங்கு துணை முதல்வர் இல்லத் திருமணத்திற்காக உரிய விசா அனுமதியைப்பெற்று மலேசியாவுக்குச் சென்றபோது விமான நிலையத்தில் அவரைத் தடுத்துத் திருப்பி அனுப்பியுள்ளனர்.

தான் முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்று பல்வேறு ஆதாரங்களைக் காட்டியும் அவரை ஒரு சிறைக்கைதியைப் போல நடத்தியுள்ளனர். மலேசிய அரசின் இந்த அத்துமீறிய செயலை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்

வைகோ மலேசியாவுக்குக் பலமுறை சென்று வந்திருக்கிறார். அவர் உலகறிந்த ஒரு தலைவர். மலேசிய நாட்டிலிருக்கும் துணை முதல்வர் இல்லத் திருமணத்திற்கு தான், அழைப்பின் பேரில் அவர் சென்றிருக்கிறார். துணை முதல்வர் இராமசாமி, பினாங்கு முதல்வர் உள்ளிட்டவர்கள் எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் மலேசிய விமானநிலைய அதிகாரிகள் அதற்கு மதிப்பளிக்கவில்லை.

வைகோவை விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் என்றும் அவரால் மலேசிய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென்றும் பொய்யான காரணங்களைக்கூறி விமான நிலையத்தில் 16 மணிநேரம் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். அவர் எழுந்துபோய் உணவு அருந்தக்கூட அனுமதிக்கவில்லை; பட்டினியாகவே வைக்கப்பட்டிருக்கிறார். மலேசிய அரசின் இந்த நடவடிக்கை அண்ணன் வைகோ அவர்களுக்கு நேர்ந்த அவமானமட்டுமல்ல; தமிழினத்திற்கும் இந்திய நாட்டிற்கும் நேர்ந்த அவமானமே ஆகும்.

மலேசிய அரசு இப்படி நடந்துகொண்டதின் பின்னால் இலங்கை அரசாங்கத்தின் தூண்டுதல் இருக்கலாம் என்கிற ஐயம் எழுந்துள்ளது. அவ்வாறு இலங்கை அரசு மலேசிய அரசை வலியுறுத்தி இருக்குமேயானால் அது கண்டனத்திற்குரியது.

வைகோவை அவமானப்படுத்தி திருப்பி அனுப்பிய மலேசிய அரசாங்கத்திற்கு இந்தியா தனது கண்டனத்தைத் தெரிவிக்கவேண்டும். அதற்கு பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x