

தமிழ்நாட்டில் என்ன முயற்சி செய்தாலும் ஆட்சி அமைக்க முடியாது என்பதால் பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டினார்.
சுயமரியாதை இயக்கத்தின் 90-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் திராவிடர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கி. வீரமணி கூறியதாவது:
மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும், ஒற்றைக் கலாச்சாரத்தை உள்ளடக்கிய, கல்வியை காவிம யமாக்கி இந்தி, சமஸ்கிருத திணிப்பு மற்றும் குலக்கல்வி திட்டத்தை புகுத்தும் கல்விக் கொள்கையை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டால், சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் வசதியான மாணவர்களே பயன்பெறுவர். சாமானிய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். திரும்பத் திரும்ப தேர்வு எழுதும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்படுவதால் மனரீதியாக பாதிப்படைகின்றனர். மேலும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு பயிற்சியளிக்க கல்வி வியாபார வாய்ப்பு ஏற்படும். எனவே, நீட் தேர்வை அமல்படுத்தக் கூடாது.
அரியலூர் மாவட்டம் பொன்பர ப்பியில் ஆணவக் கொலைகள் கண்டன மாநாடு மற்றும் பெண்கள் பாதுகாப்பு மாநாடு வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தனிநபர்களிடமிருந்து ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே நன்கொடை பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரம், ஆந்திர மாநிலங்களில் விவசாயிகள் மரணம் அதிகளவில் நடை பெற்றது. தற்போது தண்ணீர் வசதியில்லாததால் தமிழ்நாட்டிலும் விவசாயிகள் மரணம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்காத வகையில் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்பட்டது.
தமிழ்நாட்டில் என்ன முயற்சி எடுத்தாலும் பாஜக ஆட்சி அமைக்க முடியாது என்பதால் மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. ஜெயலலிதா இறந்த பின் மத்திய அரசு தமிழ்நாட்டை பார்க்கும் விதம் மாறியுள்ளது. உணவு பாதுகாப்பு மசோதாவை ஜெயலலிதா எதிர்த்து வந்த நிலையில் தற்போது தமிழ்நாடு இந்த மசோதாவில் கையெழுத்திட்டுள்ளதால் தமிழ்நாட்டுக்கு மேலும் ரூ.19 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும்.
எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் அமையும் எனக் கூறப் பட்ட நிலையில் ஆந்திர மாநிலத்தில் அமைக்கப் பட்டது. அதேபோல தற்போது குஜராத் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் அமைக்கப்போவதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கிளை அமைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.