

புதுச்சேரி இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அப்போது என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்தனர். பணியாளர்களை நீக்கியதுதான் அரசின் சாதனை என்று எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி குற்றம் சாட்டினார்.
இன்று காலை (வியாழக்கிழமை) புதுச்சேரி சட்டப்பேரவை தொடங்கியவுடன் முதல்வர் நாராயணசாமி எழுந்து, மதிப்பு கூட்டு வரி தொடர்பாக வாசித்தார். அத்துடன் கூடுதல் செலவினங்களுக்காக ரூ.1,481 கோடிக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார்.
அப்போது அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுந்து பேசத்தொடங்கினர். எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டி, சபாநாயகர் இருக்கை முன்பாக சென்றனர். அவர்களை சபைக் காவலர்கள் தடுத்தனர். அதைத்தொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி எழுந்து, "அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. நீட் தேர்வு தொடர்பாக தெரிவிக்கவில்லை" என்று குற்றம் சாட்டினார். பின்னர் அவரது தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
'பணியாளர்களை நீக்கியதுதான் அரசின் சாதனை'
அதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''அரசு முழு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. முழு பட்ஜெட் சமர்ப்பிக்காத காரணம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும். அரசு அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவில்லை. வளர்ச்சியும் இல்லை. எம்எல்ஏ நிதியும் தரவில்லை. இதனால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு இழப்பீடு தரவில்லை. பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு ஊதியம் தரவில்லை. ஊழியர்களின் நிரந்தர பணி ஆணை ரத்து செய்யப்பட்டு தற்காலிக ஊழியராக்கப்பட்டுள்ளனர். பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசு நிறுவனங்கள் லாபம் ஈட்டவும், ஏஎப்டி மில்லை இயக்கவதாகவும் கூறி விட்டு ஒரு அதைச் செயல்படுத்தவில்லை. அரசின் ஒரே சாதனை பணியாளர்களைப் பணிநீக்கம் செய்ததுதான். ஆட்சியாளர்கள் ஆளுநருடன் மோதல் போக்கினால் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் யார் ஆணையைச் செயல்படுத்துவது என்று திக்குமுக்காடுகின்றனர்.
அதேபோல் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக அமைச்சர்களே பேசுகின்றனர். தொடர்ந்து பல காரணங்களால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
எம்எல்ஏக்களுக்கும் உரிய மரியாதை இல்லை. பேரவையில் உறுப்பினர்களுக்குப் பேசவும் வாய்ப்பு தரப்படுவதில்லை. அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவேண்டும். அப்போது எம்எல்ஏக்களுக்கு பேச வாய்ப்பு தர வேண்டும்'' என்று தெரிவித்தார்.