

கடலோர பாதுகாப்பு மற்றும் பேரிடர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்துவதற்கான அதிநவீன எச்-197 விமானம் தாங்கி கப்பலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஸன் கவுல் நேற்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்திய கடலோரங்களை கண்காணிக்கவும், பேரிடர்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் மீனவர்களை உடனடியாக மீட்கவும் அதிநவீன எச்-197 விமானம் தாங்கி கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஸன் கவுல் இக்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சி இந்திய கடலோர பாதுகாப்பு படை கிழக்கு பிராந்திய மையத்தில் நடந்தது.
இக்கப்பல் குறித்து இந்திய கடலோர பாதுகாப்பு படை கிழக்கு பிராந்திய தலைமை ஆய்வாளர் சத்யபிரகாஷ் சர்மா நிருபர்களிடம் கூறும்போது, “இந்த கப்பல் முழுக்க முழுக்க லண்டன் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த க்ரிஃபான் ஹொவர்வொர்க்ஸ் நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. இந்த அதிநவீன கப்பல் புயல் நேரத்தில் கடலின் தன்மை குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்கும். இதன் மூலம் புயல் கரையை கடக்கின்ற நேரத்தில் மீனவர்களை பத்திரமாக மீட்டு வரமுடியும்” என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி கடற்படை அதிகாரி (பொறுப்பு) அமர் மகாதேவன், தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் டி.ஸ்ரீதர், ஆற்காடு இளவரசர் முகம்மது அப்துல் அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.