மயிலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டையில் ஓட்டல்கள் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 28 பேர் கைது

மயிலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டையில் ஓட்டல்கள் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 28 பேர் கைது
Updated on
1 min read

மயிலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை யில் ஓட்டல்கள் மீது தாக்குதல் நடத்திய நாம் தமிழர் கட்சியினர் 28 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. நேற்று மயிலாப்பூர் லஸ் கார்னர் சந்திப்பு அருகே உள்ள பிரபல ஓட்டலுக்குள் புகுந்த நாம் தமிழர் கட்சியினர் அங் கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். ஓட்டல் பாதுகாப்புக் காக முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக போலீஸார் நிறுத்தப் பட்டிருந்தாலும், அவர்களுக்கு தெரியாமல் வாடிக்கையாளர்கள் போல ஓட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ஸ்டாலின் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல சிந்தாதிரிப் பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு ஓட்டலுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர். இதில் அக்கட்சியை சேர்ந்த சிவக்குமார் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

அண்ணா சாலையில் அண்ணா சிலை அருகே தமிழர் எழுச்சி இயக்கம் சார்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

கர்நாடக மாநில நிறுவனங்களுக்கு பாதுகாப்பு

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எஸ்.ஜார்ஜ் கூறுகையில், "கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் நடத்தும் 68 ஓட்டல்கள், 27 பேக்கரிகள், 10 பள்ளிகள், கர்நாடக வங்கிக்கு சொந்தமான 66 ஏடிஎம் மையங்கள் சென்னையில் உள்ளன. இவை அனைத்துக்கும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடக அரசுக்கு சொந்தமான பேருந்துகள் கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், துறைமுகத்துக்கு வரும் கர்நாடக லாரிகள் நிறுத்தப்பட்டிருக்கும் இடம் உட்பட கர்நாடக மாநிலத்தவருக்கு சொந்தமான சுமார் 180 இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் காவல் உயர் அதிகாரிகள் அடிக்கடி ரோந்து வந்து செல்லவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.

அவர் மேலும் கூறுகையில் காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில் சமூக விரோதிகள் பொய்யான தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பி, இன உணர்வுகளை தூண்டி வெறுப்பையும், பகைமையும் ஏற்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவித்து வருகின்றனர்.

பொதுமக்கள் இத்தகைய பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட வேண் டாம் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் அறிவித்து உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in