

திண்டுக்கல் மாவட்டத்தில் விடிய விடிய பெய்த மழையால் பழநி அருகே அணைகள், ஓடைகள் நிரம்பின. வெள்ளத்தில் சிக்கி வீட்டு மாடிகளில் தவித்த 27 பேர், விமானப்படை ஹெலிகாப்டர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் மூலம் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.
பழநியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை தொடர்ந்து 11 மணி நேரம் அடைமழை பெய்ததால் விவசாயத் தோட்டங்கள் தண்ணீரில் மூழ்கின. பழநி அருகே வரதமாநிதி அணை நிரம்பியதால், வெளியேறிய தண்ணீர் கணக்கன்பட்டி, எர்ரம நாயக்கன்பட்டி கிராமங்களில் 50 வீடுகளைச் சூழ்ந்தது. அச்சமடைந்த மக்கள், மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறினர். வெளியேற முடியாதவர்கள் வீட்டு மாடிகளில் ஏறினர்.
போக்குவரத்து துண்டிப்பு
பழநி தீயணைப்பு அலுவலர் மயில்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், எர்ரமநாயக் கன்பட்டியில் வெள்ளத்தில் சிக்கிய 3 பேரையும், சித்தலவாடன்பட்டியில் வீட்டு மாடியில் தவித்த 6 பேரையும், கொங்கப்பட்டியில் வீட்டு மாடியில் தவித்த 2 குழந்தைகள் உட்பட 7 பேரையும் மீட்டனர்.
வெள்ளப் பெருக்கால் பழநி- திண்டுக்கல் சாலையில் பாலம் உடைந்து நேற்று காலை முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதனால், வாகனப் போக்குவரத்து தொப்பம்பட்டி, கள்ளிமந்தையம், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்லுக்கு மாற்றிவிடப்பட்டன.
11 பேர் தப்பினர்
பழநி அருகே நல்லதங்காள் ஓடை உடைந்து வெளியேறிய தண்ணீர், மஞ்சநாயக்கன்பட்டி காளிப்பட்டி கிராமத்தில் புகுந்தது. இந்த கிராமத்தில் பெரியசாமி என்பவரது தோட்டத்தில் 16 பேர் தங்கி வேலை பார்த்தனர். தோட்டத்தை வெள்ளம் சூழ்ந்த போது அங்கிருந்தவர்களில் 11 பேர் ஒரு வீட்டு மாடியில் ஏறிக் கொண்டனர். மற்ற 5 பேர் எப்படியோ தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்த ஆட்சியர் வெங்கடாசலம், காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், தீயணைப்பு அலுவலர் காங்கேய பூபதி, உதவி மாவட்ட அலுவலர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் முகா மிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.
ஹெலிகாப்டரில் மீட்புப் பணி
தீயணைப்பு அலுவலர் மயில்ராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள், வெள்ளம் சூழ்ந்த தோட்டத்தில் சிக்கிய 11 பேரையும் மீட்க போராடினர். வெள்ளப் பெருக்கின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களை மீட்க முடியவில்லை. மாடியில் தவித்த 11 பேரும் நேற்று காலை முதல் குடிநீர், சாப்பாடு கிடைக்காமல் தவித்தனர். இதுபற்றி ஆட்சியர், முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர் கேட்டுக்கொண்டதன்பேரில், கோவை சூலூர் விமானப்படை ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, மீட்புக் குழுவினர் 11 பேரையும் மீட்டனர். குதூகலமாக தங்கள் வீடுகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த இந்த பகுதி மக்களுக்கு, வெள்ளம் நிலைமை வருத்தத்தை அளித்தது.
35 ஆண்டுகளுக்குப் பின் பழநியில் மிகப் பெரிய வெள்ளம்
இதுகுறித்து பழநி தீயணைப்பு நிலைய அலுவலர் மயில்ராஜ் கூறும்போது, ‘பழநி பகுதியில் கடந்த 35 ஆண்டுகளில் இதுபோன்ற மழை வெள்ளம் வந்ததில்லை. ஹெலிகாப்டர் மூலம் 11 பேரும், தீயணைப்புத் துறை மூலம் கயிறு கட்டி 16 பேரும் மீட்கப்பட்டனர். பழநி அருகே கோவிந்தாபுரத்தை வெள்ளம் சூழ்ந்ததால், கிராமவாசிகள் வீடுகளைக் காலி செய்து சென்றனர்.
அந்த கிராமத்தில் 75 வயது வெள்ளையன் என்பவர், வீட்டில் தண்ணீரில் சிக்கி கூச்சலிட்டார். அவருக்கு அறுவைசிகிச்சை சமீபத்தில் நடந்துள்ளது. உறவினர்கள், இவரை அழைத்தபோது, வலியால் இவரால் எழுந்துவர முடியவில்லை. அதனால், இவரை விட்டுச்சென்றுள்ளனர். நாங்கள் அவரை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தோம். வெள்ளத்தில் சிக்கி யாரும் மாயமாகவில்லை என்றார்.