ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற திட்டம்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு கர்நாடகம் ஒப்புதல்

ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்ற திட்டம்: தமிழக அரசின் நடவடிக்கைக்கு கர்நாடகம் ஒப்புதல்
Updated on
2 min read

பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெய லலிதாவை தமிழக சிறைக்கு மாற்று வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு கர்நாடக அரசும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெய லலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்ததையடுத்து, கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தை இரு மாநில பிரச்சினையாக அதிமுகவினர் மாற்ற முயற்சிப்பதால் ஜெயலலி தாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தார்.

தமிழக அரசும், ஜெயலலிதாவும் கோரிக்கை வைத்தால் சிறையை மாற்றம் செய்வது குறித்து பரிசீலணை செய்வோம் என கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி.ஜெய் சிம்ஹா தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் சிலர், ‘தி இந்து'விடம் கூறியதாவது:

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கர்நாடக‌ சிறையில் இருப்பதால், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மேலும் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தமிழக மக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

ஜெயலலிதாவை காண்பதற்காக தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பெங்களூருக்கு வந்துக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் தினமும் ஆயிரக்கணக்கான போலீஸாரை கர்நாடக அரசு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துகிறது. மேலும் சிறையில் அவருக்கு தேவையான பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவதில் நிறைய நிர்வாக சிக்கல்களை கர்நாடக அரசு சந்தித்து வருகிறது.

இன்னொரு புறம் ஜெயலலிதா உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை சீரான நிலைக்கு கொண்டுவர கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதும், முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அமைச்சர்களுக்கு ஒருவித அச்ச உணர்வு இருக்கிறது. எனவே, ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றிவிடுங்கள் என எங்களிடம் கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் ஜெயலலிதாவை தமிழக சிறைக்கு மாற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. இந்த தகவல் ஜெயலலிதாவிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஜெயலலிதா, “த‌மிழக சிறைக்கு மாற்றக்கோருவதால் தனது ஜாமீன், தண்டனை ரத்து, மேல் முறையீட்டு மனுக்களில் ஏதேனும் சட்ட சிக்கல் ஏற்படுமா? நீதித்துறை வட்டாரத்தில் அதிருப்தி ஏற்படுமா? என சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சட்ட நிபுணர்களிடம் தமிழக அரசு ஆலோசனை நடத்தியது. அதற்கு சம்பந்தப்பட்ட குற்றவாளியும், அரசும் கோரிக்கை விடுத்தால் சிறை மாற்றம் செய்ய சட்டம் அனுமதிக்கிறது என பதில் தரப்பட்டுள்ளது என்று தெரி வித்தனர்.

17-ம் தேதிக்கு பிறகு முடிவு

இந்நிலையில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த நேரத்தில் சிறை மாற்றம் குறித்த கோரிக்கை அதனை பாதிக்க வாய்ப்பிருக்கிறது. எனவே ஜாமீன் மனு மீதான முடிவு வந்தவுடன் அவரை தமிழக சிறைக்கு மாற்றலாம் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in