

வழக்கு விசாரணைக்கு ஆஜராகா மல் இருப்பதற்கு இந்த நீதிமன்றம் என்ன பாவ பூமியா? என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி என்.கிருபாகரன், அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜ ராகாத சென்னை போலீஸ் ஆணையர் ஜார்ஜுக்கு கண்டனம் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி 196-வது வார்டு அதிமுக கவுன்சிலர் அண்ணாமலை. இவருக்கு சொந்த மாக ஈஞ்சம்பாக்கம் பகுதியில் 12 வீடுகள் உள்ளன. ஆனால் அந்த வீடுகளுக்கு சொற்ப தொகையை சொத்து வரியாக செலுத்தி மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக, அதே பகுதி யைச் சேர்ந்த பொன்.தங்கவேலு என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கவுன் சிலர் அண்ணா மலை தனக்கு அசையா சொத்துகளே இல்லை என தனது வேட்புமனுவில் குறிப்பிட்டு இருந்ததால், இந்த வழக்கை தலைமை நீதிபதி விசாரிக்க பரிந்துரைத்தும், வழக்கு தொடர்ந்த பொன்.தங்கவேலுவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தர விட்டார்.
அதன்படி இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அடங்கிய முதல் அமர்வு, கவுன்சிலர் அண்ணாமலை சட்ட விரோதமாக விதிமுறைகளை மீறி கட்டியுள்ள வீடுகளை இடிக்கவும், முறையாக வருமான வரி செலுத்தி யுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது. வருமான வரித்துறையும் விசா ரணை நடத்தி, அண்ணாமலைக்கு சொந்தமான கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துகள் குறித்த அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் மனுதாரரான பொன்.தங்கவேலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில், ‘‘எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை பாதுகாப்பு வழங்க வில்லை’’ என அதில் கூறியிருந்தார்.
இந்த அவமதிப்பு வழக்கு விசாரணை நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “போலீஸ் உயரதிகாரிகளே நீதிமன்ற உத்தரவை மதிக்காவிட் டால் அவர்களின் கீழ் உள்ள அதிகாரிகள் எப்படி மதிப்பார்கள்?” எனக் கூறி போலீஸ் ஆணையர் ஜார்ஜுக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் எப்போது ஆஜராவார்? என கேள்வி எழுப்பினார். அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணி, “மனு தாரரான பொன்.தங்கவேலுவுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும்” என்றார்.
ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதி என்.கிருபாகரன், ‘‘இந்த நீதி மன்றம் என்ன பாவ பூமியா? அல்லது நீதிமன்றத்தில் ஆஜராவது கவுரவ பிரச்சினையா? நீதிமன்ற உத்தரவு களை அமல்படுத்த வேண்டியது அதிகாரிகளின் கடமை. ஆனால், அதை அவர்கள் அமல்படுத்தாததால் அரசு வழக்கறிஞர்கள்தான் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். உயரதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிட்டால் சம்பந்தப்பட்ட அந்த அரசு வழக்கறிஞரின் பதவி பறிபோய்விடும் என பல வழக்கறிஞர்கள் என் னிடமே தெரிவித்துள்ளனர். அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை களில்தான் அரசு வழக்கறிஞர்களும் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர, பொதுமக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை’’ என கருத்து தெரிவித்து விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தார்.
பிற்பகல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.முத் துக்குமாரசாமி ஆஜராகி, “இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்கிறோம்” என்றார்.
ஆனால் நீதிபதி என்.கிருபா கரன், ‘‘முதலில் ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராக வேண்டும். எப்போது ஆஜராவார்? என்பதை மீண்டும் கேட்டுச் சொல்லுங்கள்” எனக் கூறி வழக்கை தள்ளிவைத்தார்.