

ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூரில் இருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம்படை வீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிக்கிருத்திகை விழா இந்தாண்டு வரும் 28-ம் தேதி நடக்கிறது. இதையொட்டி 3 நாட்கள் தெப்பத் திருவிழாவும் கோலாகலமாக நடக்கும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன.
பேருந்துகளில் கூட்டம்
இதுகுறித்து பக்தர்கள் சிலர் கூறும்போது, ‘திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் அவை போதுமான எண்ணிக் கையில் இருப்பதில்லை. இதனால், பேருந்துகளில் கூட்டம் அலைமோதும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து செல்லும் பெரும் பாலானோர் காவடி எடுத்துச் செல்கின்றனர். அவர்கள் பேருந்துகளில் செல்லும்போது சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதேநேரம், திருவள்ளூரில் இருந்து திருத்தணிக்கு குறைந்த அளவிலேயே ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே, திருவிழாவை முன்னிட் டாவது சென்னையிலிருந்து கூடுதலாக திருத்தணிக்கு சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் இயக்க வேண்டும். பேருந்து கட்டணத்தைவிட ரயில் கட்டணம் குறைவு’ என்று தெரிவித்தனர்.