Published : 27 Feb 2014 12:00 AM
Last Updated : 27 Feb 2014 12:00 AM

வாசன் தலைமையில் காமராஜர் ஆட்சி: காங்கிரஸ் தலைவர்கள் கோரிக்கை

தமிழகத்தில் ஜி.கே.வாசன் தலைமையில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டுமென்று காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எண்ணூர் துறைமுகத்துக்கு காமராஜரின் பெயரை சூட்டும் விழாவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேசியதாவது:

பி.எஸ்.ஞானதேசிகன் (தமிழக காங்கிரஸ் தலைவர்): மிகப்பெரிய காரியத்தை வாசன் செய்துள்ளார். காங்கிரஸார் இங்கு திரண்டுள்ள நிலையில், காங்கிரஸ் அலுவல கத்தை நோக்கி, வன்முறை செய்வோர் யாராவது வருவதை அனுமதித்தால் காங்கிர ஸார் அதை வேடிக்கை பார்க்க மாட்டார்கள். இது போன்ற சம்பவங்களை இந்த அரசு அனுமதித்தால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விடும் நிலை ஏற்படும்.

காங்கிரஸுக்கு தேர்தலோ, வெற்றி, தோல்வியோ முக்கியமல்ல. கட்சியும், கொள்கைகளும், தலைவர்களும்தான் முக்கியம் என்பதை இந்த விழா காட்டி யுள்ளது. காமராஜர் துறைமுகம் என்ற பெயருடன், பெருந்தலைவர் என்ற அவரது புகழ் மொழியையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், (முன்னாள் மத்திய அமைச்சர்): நாட்டின் மிகப்பெரிய அரசியல் தலைவரான ராஜிவ் காந்தி ஒரு அரசியல் தலைவரை காப்பாற்றினார். அவரால் காப்பாற்றப்பட்ட அந்த அரசியல் தலைவர், ராஜிவை கொன்றவர்களை விடுதலை செய்வோம் என்று அரசியல் நடத்துகிறார். அந்தத் தலைமை எங்கே? இங்கே மூத்த தலைவரை மரியாதை செய்யும் விதமாக, காமராஜருக்கு பெயர் சூட்டும் நமது தலைமை எங்கே? நமது இளவரசரான அமைச்சர் வாசன் இந்த அரிய பணியை செய்திருக்கிறார். இதுபோன்ற மிகப்பெரிய தலைவரின் பெயரை, துறைமுகத்திற்கு சூட்டும் முயற்சியை கண் இமைக்கும் பொழுதில், சத்தமில்லாமல் அமைச்சர் வாசன் தெரிவித்துள்ளார். இதே வேறு தலைவர்களாக இருந்தால், பேரணி நடத்துங்கள், பேனர் வையுங்கள் என்றும், தெய்வமே என வாழ்த்துங்கள் என்றும் ஆர்ப்பரிக்க வைத்திருப்பார்கள்.

காங்கிரஸ் கட்சியை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது. காங்கிரஸை ஒழித்து விட்டோம் எனக் கூறுவோருக்கு தக்க பதிலடி தருவோம். கூட்டணி வந்தாலும், வராவிட்டாலும், காங்கிரஸார் இந்தத் தேர்தலில் உயிரைக் கொடுத்து போராட வேண்டும். மோடி போன்ற குரங்குகளின் கையில் நாட்டைக் கொடுத்து விடக்கூடாது.

பீட்டர் அல்போன்ஸ், (முன்னாள் எம்.எல்.ஏ.): காங்கிரஸுக்கு சோதனையான காலம் இது. காங்கிரஸை நாம் தூக்கிச் சுமக்க வேண்டிய கட்டத்தில் உள்ளோம்.

விஸ்வநாதன், எம்.பி: என்னைப் போன்ற தாழ்த்தப்பட்ட, தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி பெறுவதும், ஆட்சி அதிகாரப் பதவிகளைப் பிடிக்கவும், காமராஜரும், அவருக்குப் பின் வந்த மூப்பனாருமே காரணம். எனவே மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மத்தியில் அமையும்.

பிரின்ஸ், எம்.எல்.ஏ.: தற்போது அனைத்து போர்ட்களையும் (துறைமுகங்களையும்) சிறப்பாக வழி நடத்தியுள்ள மத்திய அமைச் சர் வாசன், விரைவில் ஜார்ஜ் போர்ட்டையும் (ஜார்ஜ் கோட்டையும்) ஆள வேண்டும்.

ஜான் ஜேக்கப் எம்.எல்.ஏ: தமிழகத்தில் வாசன் தலைமையிலான காமராஜர் ஆட்சி அமைய காங்கிரஸார் சபதம் ஏற்போம்.

முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன்: முதல மைச்சராக பதவியேற்று, தமிழகத்தை வாசன் ஆள வேண்டும். அவரை காங்கிரஸாரும், தமிழக மக்களும் அரியணை ஏற்றினால் காமராஜர் ஆட்சி மீண்டும் கிடைக்கும்.

விஜயதாரணி எம்.எல்.ஏ: தமிழகத்தில் தற்போது, காமராஜர் வழியில் ஆட்சி அமைப்பதற்கு, மத்திய அமைச்சர் வாசனால் மட்டுமே முடியும். எனவே அவர் தமிழகத்தை வழி நடத்த வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x