

திருச்சி அருகே நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் நேற்று திடீரென தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதித்துள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. எனினும், சில இடங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டுக் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் அருகே நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் உள்ள அடைக்கல மாதா ஆலயம் முன் நேற்று காளைகளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து 20-க்கும் மேற்பட்ட காளைகள் தனித்தனியாக அவிழ்த்துவிடப்பட்டன. இளைஞர் கள் அவற்றை அடக்க முயற்சித் தனர். எவ்வித முன் அறிவிப்புமின்றி, திடீரென நடைபெற்ற இந்த ஜல்லிக் கட்டு குறித்த தகவல் பரவியது. இதனால் சுற்றுவட்டார கிராமங் களைச் சேர்ந்த நூற்றுக்கணக் கானோர் அங்கு திரண்டனர்.
இதையறிந்த ராம்ஜி நகர் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று, காளைகளை அவிழ்த்துவிடுவதை தடுத்து நிறுத்தினர். பின்னர் தடியடி நடத்துவதாக எச்சரிக்கை விடுத்து, பொதுமக்களை அங்கிருந்து கலைத்தனர்.
காவல் நிலையம் முற்றுகை
இதற்கிடையே, நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயற்சித்ததாக கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் ராம்ஜி நகர் போலீஸில் புகார் செய்தார். அதன்பேரில் அந்த கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் 2 பேரை போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவலூர் குட்டப்பட்டு கிராம மக்கள், ராம்ஜி நகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.