அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்பதற்கான தமிழ்நாடு அரசின் சட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜி.சரவண குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

“தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக் கீட்டிலிருந்து அருந்ததியர் பிரிவினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத்தை கடந்த 2009-ம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டம் காரணமாக நான் உள்பட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பான்மையானவர்களின் இட ஒதுக்கீட்டு உரிமை பாதிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் சிவில் நீதிபதிகளுக்கான தேர்வு நடைபெறவுள்ளது. அந்தத் தேர் வில் நானும் பங்கேற்கிறேன். சிறப்பாக தேர்வு எழுதினாலும் கூட அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்தின் காரணமாக நான் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்த உள் ஒதுக்கீட்டு சட்டம் அமலுக்கு வந்த பிறகு அருந்ததியர் அல்லாத பிற தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அரசுப் பணிகளில் சேர முடியாமல் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

தாழ்த்தப்பட்ட ஜாதிகளின் தொகுப்பு தொடர்பாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ளது. கடந்த 1950-ம் ஆண்டு முதல் இதுதான் நடைமுறையில் உள்ளது. இந்த ஜாதி தொகுப்பில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மட்டும்தான் அதற்கான சட்டம் இயற்ற முடியும்.

இந்நிலையில், தாழ்த்தப்பட்டவர்களுக் கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு இயற்றிய சட்டம் அரசியலமைப்புச் சட்டத் துக்கே முரணானது. ஆகவே, இந்த சட்டம் செல்லாது என நீதிமன்றம் அறிவிக்க வேண் டும் என்று அவர் தனது மனுவில் கோரி யுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சதீஷ் கே.அக்னி ஹோத்ரி, நீதிபதி கே.கே சசிதரன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ப.விஜேந்திரன் ஆஜராகி வாதிட்டார். இதனையடுத்து இந்த மனு தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in