

இந்தியாவில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை என்ற நிலையே இல்லை என்று மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளார்.
மத்திய உணவு, நுகர்வோர் விவகாரம் மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், தென் மண்டல இந்திய உணவுக் கழக அதிகாரிகளுடன் நேற்று சென்னையில் ஆலோசனை நடத்தினார். இதில் தென் மண்டல இந்திய உணவுக் கழக செயல் இயக்குநர் ராவுத்தர் தாவூத் நஜீம், தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலர் நிர்மலா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் உணவுப் பொருள்களின் தேவை, இருப்பு விவரம், கிடங்குகளின் எண்ணிக்கை, விநியோக விவரம் போன்றவற்றை அமைச்சர் பஸ்வான் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை சில மாநிலங்கள் அமல்படுத்தியுள்ளன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங் கள் இன்னும் அமல்படுத்த வில்லை. ஆனாலும் அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான உணவுப் பொருட்களை மானியத்துடன் வழங்குகிறோம்.
பதுக்கல்காரர்களை உடனடி ஜாமீனில் வெளிவர முடியாதபடி, ஓராண்டு வரை சிறையில் அடைக்க முடியும். இதை அந்தந்த மாநிலங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். பொது விநியோக முறையில் ரேஷன் கடைகளில் மானிய விலையில் பொருட்கள் வழங்குவது குறித்த பயனாளிகள் பட்டியலிலிருந்து, வருமான வரி செலுத்துவோர், முதல், இரண்டாம் நிலை அரசு அதிகாரிகளாக பணிபுரிவோரை நீக்கும் முடிவு பரிசீலனையில் உள்ளது. இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. ஆனால், நடுத்தர மற்றும் கீழ் நிலை பயனாளிகளுக்கு எந்த வித பாதிப்பும் வராது.
ரேஷன் கடைகளில் நுகர் வோருக்குத் தேவையான உணவுப் பொருட்களை இருப்பு வைத்து வழங்க வேண்டும். இதை உறுதிப் படுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும். எனவே, நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் கிடைக்காவிட்டால், மாநில அரசு அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.
மத்திய அரசைப் பொறுத்த வரை, மாநிலங்கள் கேட்கும் உணவுப் பொருளை முழுவதுமாக வழங்கி வருகிறோம். தற்போது கூட கோதுமை அதிகமாகக் கேட்டுள்ளனர். அதையும் வழங்கத் தயாராக இருக்கிறோம். எனவே இந்தியாவில் உணவுப் பொருள் பற்றாக்குறை என்ற நிலையே இல்லை என்றார்.