

தமிழக சட்டப் பேரவையில் நடப்பு ஆண்டின் முதல் கூட்டத் தொடர் வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. முதல் நாளன்று, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றுவார்.
ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்திலும், தமிழக சட்டப் பேரவையில் ஆளுநரின் உரை இடம்பெறும். பின்னர், அதன் மீதான உறுப்பினர்களின் விவாதம் நடைபெறும். இறுதி நாளன்று, ஆளுநரின் உரை மீதான விவாதத்துக்கு முதல்வர் பதிலுரை ஆற்றுவார்.
தமிழக சட்டப் பேரவை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் வெளியிட்ட செய்தியில், “தமிழக சட்டப் பேரவை கூட்டத்தை வரும் 30–ந்தேதி (வியாழக்கிழமை) ஆளுநர் கூட்டியிருக்கிறார். அன்று நண்பகல் 12 மணிக்கு ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத் தொடர், எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது பற்றி, அன்றைய தினம் கூடும் பேரவை அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவெடுக்கப்படும். இக்கூட்டத் தொடர் சுமார் ஒரு வார காலம் நீடிக்கலாம். அதன்பிறகு, சிறிது இடைவெளி விட்டு, வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தொடர் கூட்டம் நடைபெறும் எனத் தெரிகிறது.