Published : 07 Jun 2016 10:09 AM
Last Updated : 07 Jun 2016 10:09 AM

வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கு: மனைவியே கூலிப்படையை ஏவினார்- 4 பேர் கைது; 2 பேருக்கு வலை

கோடம்பாக்கத்தில் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவில் வசிப்பவர் முருகன்(44). எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். குடியிருப்பை மாற்றுவதற்காக வாடகை வீட்டை தேடினார். கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் 6-வது குறுக்கு தெருவில் உள்ள அஷ்டபதி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை பார்க்கச் சென்றார். நேற்று முன்தினம் பிற்பகல் குடியிருப்பு வளாகத்துக்கு வெளியே காரை நிறுத்திவிட்டு, குடியிருப்பு வளாகத்துக்கு உள்ளே முருகன் நடந்து சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் முருகனை சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

கொலை நடந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகே ஒரு ஹார்டுவேர்ஸ் கடை மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகிய இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் கொலையாளிகளின் உருவம் பதிவானது. கொலையாளிகளை பிடிக்க தி.நகர் காவல் உதவி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோவை வைத்து போலீஸார் முதல்கட்ட விசாரணையை தொடங்கினர். கொலை செய்யப்பட்ட முருகன் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரியின் செல்போன் எண்களையும் ஆய்வு செய்தனர். முருகன் கொலை செய்யப்பட்ட இடத்துக்கு அருகே இருந்த செல்போன் டவரில் கொலை நடந்த நேரத்தில் பேசப்பட்ட எண்களையும் போலீஸார் சேகரித்து விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "கோடம்பாக்கத்தில் முருகன் இருந்த இடத்துக்கும் அருகே இருந்த மற்றொரு நபருக்கும் லோகேஸ்வரி மாற்றி மாற்றி செல்போனில் பேசியிருப்பது தெரிந்தது. லோகேஸ்வரியிடமும், அந்த மற்றொரு நபரிடமும் தனியாக விசாரணை நடத்தினோம். இதில் இருவருக்கும் இடையே தவறான தொடர்பு இருப்பது தெரிந்தது. மனைவிக்கும் மற்றொரு நபருக்கும் தவறான தொடர்பு இருப்பதை அறிந்த முருகன் இருவரையும் கண்டித்திருக்கிறார். இதனால்தான் வீட்டை மாற்றும் முடிவுக்கும் வந்திருக்கிறார்.

தவறான தொடர்புக்கு தடையாக இருந்த கணவனை கொலை செய்யும் முடிவுக்கு வந்த லோகேஸ்வரி, கணவன் செல்லும் இடத்தை அந்த நபருக்கு தெரிவித்து இருக்கிறார். அந்த நபர் தனது கூட்டாளிகளுடன் சென்று முருகனை கொலை செய்திருக்கிறார். லோகேஸ்வரி, சுப்பிரமணி, மணி, முரளி ஆகிய 4 பேரை பிடித்து விட்டோம். மேலும் சண்முகம், ஜஸ்டின் ஆகிய 2 பேரை தேடி வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x