Last Updated : 22 Dec, 2013 12:00 AM

 

Published : 22 Dec 2013 12:00 AM
Last Updated : 22 Dec 2013 12:00 AM

மானிய விலையில் மாட்டுத் தீவனம்: மார்ச் முதல் செயல்படுத்த அரசு திட்டம்

தமிழகத்தில் மானிய விலையில் மாட்டுத் தீவனம் வழங்கிடும் வகையில் மாநிலம் முழுவதும் 125 இடங்களில் ரூ. 12.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் தீவன வங்கி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தீவனப் பற்றாக்குறை

தமிழக விவசாயிகள் வடகிழக்குப் பருவமழை, தென்மேற்கு பருவமழையை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். பருவமழை பொய்க்கும் காலங்களில் வறட்சி ஏற்பட்டு விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. பெருவாரியான விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு மூலம் உபரி வருவாய் பெறுகின்றனர். கிராமப்புறங்களில் கால்நடை வளர்ப்பை முழு நேர தொழிலாகவும் செய்கின்றனர்.

கறவை மாடு, உழவு மாடுகளைக் கொண்டு விவசாயம், பால் உற்பத்திப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பயிருக்குத் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் காலங்களில், கால்நடைகள் போதிய தீவனமின்றி பலியாவதும், அதை அடிமாடுகளாக விற்பதும் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்குப் பருவமழையும் விவசாயிகளை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

சென்னை தவிர ஏனைய 31 மாவட்டங்களையும் வறட்சி மாவட்டமாக அறிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. மேலும், வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைச்சர் குழுவினரை அனுப்பி, நிவாரணத் தொகையையும் வழங்கி வருகிறார்.

இந்நிலையில் வறட்சியால் வாடும் விவசாயிகளின் துயர் போக்க, மாநில அரசு மாடுகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்கும் புதுத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

தீவன அட்டை தயாராகிறது

பொதுமக்களுக்கு ரேஷன் கார்டு வழங்கி, நுகர்வு பொருட்கள் வழங்குவதை போன்று, கால்நடை வளர்ப்பவர்களுக்கு தீவன அட்டை தயாராகி வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கால்நடைத் துறை இணை இயக்குநர் அலுவலகம் மூலம் பணி துரிதமாக நடந்து வருகிறது. கால்நடை வளர்ப்பவர்களின் பட்டியலைக் கொண்டு, மானிய விலையில் மாட்டு தீவனம் வழங்குவதற்கான அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக நான்கு முதல் ஐந்து தீவன வங்கிகள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் மூலம் ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு மூன்று கிலோ தீவனம் வீதம் வாரத்துக்கு 21 கிலோ மாட்டு தீவனம் வழங்கப்படுகிறது.

சோளத் தட்டு, வைக்கோல் உள்ளிட்ட உலர் தீவனங்களும் மானிய விலையில் வழங்கப்படும். அந்தந்த மாவட்டத்தில் கிடைக்கக் கூடிய உலர் தீவனங்களைக் கொண்டு தீவன வங்கி இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிலோ 10 ரூபாய்க்கு வாங்கும் உலர் தீவனங்கள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு இரண்டு ரூபாய் மானிய விலையில் வழங்கப்படும்.

125 தீவன வங்கி

தமிழகத்தில் மொத்தம் 12.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் 125 இடங்களில் மாட்டு தீவன வங்கி ஏற்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு தீவன வங்கிக்கும் ரூ.10 லட்சம் வீதம் அரசு நிதி ஒதுக்கியுள்ளது. சேலம் மாவட்டத்தில் தலைவாசல், சேசன்சாவடி, நரசோதிப்பட்டி, கொங்கணாபுரம், மேச்சேரி ஆகிய ஐந்து இடங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மார்ச் முதல் செயல்படும்?

தமிழகத்தில் ஓரளவு மழை பெய்ததால் இரண்டு மாதங்களுக்கு பசும் புல் வளர்ச்சி பரவலாக இருக்கும். தீவனங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படாத நிலை உள்ளது. வரும் மார்ச் முதல் வாரம் முதல் மாட்டுத் தீவன வங்கிகள் இயங்கிட மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கால்நடைகளுக்குத் தீவன வங்கி வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. தீவனப் பற்றாக்குறையைப் போக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், பால் உற்பத்தி குறைவு ஏற்படாமலும், மாடுகளின் உணவு பற்றாக்குறையைப் போக்குவதன் மூலம் அடிமாடுகளாக விற்பனை செய்வதைத் தடுத்து கால்நடை வளர்ப்பவர்களின் வாழ்வாதாரம் மேம்பட நல்லதொரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x