

வங்கிக் கடன் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை அணுகுமுறையைக் கடைபிடிப்பதாக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடந்த 36 நாள்களுக்குமேல் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையில் புதிய புதிய உத்திகளால் மத்திய அரசின் - குறிப்பாக பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தேசிய நதிநீர் இணைப்பு சங்கத் தலைவர் விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் போராடி - தெருவில் உருண்டும், பல வகைகளில் அறப்போராட்டத்தை டெல்லியில் நடத்தியும் வருகின்றனர்.
ஆயிரம் மைல் தாண்டி ஈஷா மையம் வரை பயணம் செய்யும் பிரதமர் மோடிக்கு, பக்கத்துத் தெருவான ஜந்தர்மந்தருக்குச் சென்று ஆறுதல் வார்த்தை கூற அவகாசம் இல்லை.
தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன் - தள்ளுபடி கோரும் கடன் 6,700 கோடி ரூபாய். ஆனால், விஜய் மல்லையா தேசிய வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட தொகை 9,000 கோடி ரூபாய்.
ஏழை அய்யாக்கண்ணுகளுக்கு வெளிநாடுகளுக்கு ஓடத் தெரியவில்லை. டெல்லிக்கே வந்து கருணை மனு கொடுக்கின்றனர்.
லண்டனில் சொகுசு வாழ்க்கை வாழும் மல்லையாக்கள் அங்கே கைது செய்யப்பட்டு உடனே அங்கே ஜாமீன் பெறும் நிலை!
ஏன் இந்த இரட்டைப் பார்வை - இரட்டை அணுகுமுறை? உழுதுண்டு வாழ்வார் இன்று ஆட்சியாளரை தொழுதுண்டாலும் பலன்.... பூஜ்யம்தானா?'' என்று வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.