விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அரசு காக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை

விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அரசு காக்க வேண்டும்: ஜி.கே.வாசன் கோரிக்கை
Updated on
2 min read

நூல் விலையேற்றம், போதிய கூலி கிடைக்காதது உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ள விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை மத்திய, மாநில அரசுகள் காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் சோமனூர், கண்ணம்பாளையம், கருமத்தம்பட்டி, பல்லடம், மங்கலம், சூலூர் உட்பட பல பகுதிகளில் விசைத்தறி தொழில் நடைபெற்று வருகிறது. நூல் விலையேற்றம், போதிய கூலி கிடைக்காதது ஆகிய காரணத்தால் விசைத்தறி தொழில் மற்றும் ஜவுளித் தொழில் பாதிக்கப்பட்டு வருகிறது.

விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் கடந்த 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதால் இத்தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி தர வேண்டும் என பல ஆண்டுகளாக விசைத்தறி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்து பல கட்டங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜவுளி உற்பத்தியாளர்களிடமிருந்து விசைத்தறி உரிமையாளர்கள் பெறும் கூலி உயர்வை, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் இதுவரையில் கூலி உயர்வு, தொழிலாளர்களுக்கு வழங்கப்படாததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாதம்தோறும் நிர்ணயிக்கப்பட்ட நூல் விலை தற்போது நாள்தோறும் நிர்ணயிக்கப்படுவதால் விசைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் துணி வகைகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. மத்திய அரசும் நூல் விலையை கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை, திருப்பூர் மாவட்ட உயர் அதிகாரிகளின் முன்னிலையில் இவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு, ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அந்த ஒப்பந்தப்படி தொழிலாளர்களுக்கு கூலியை வழங்கவில்லை. இப்போராட்டத்தால் கோவை, திருப்பூர் பகுதியில் சுமார் 2 இலட்சம் விசைத்தறிகள் இயக்கப்படாமல் சுமார் 75 கோடிக்கு மேல் உற்பத்தி பாதிக்கப்பட்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல இலட்சம் தொழிலாளர்ககள் பாதிக்கப்படுகிறார்கள்.

இதனால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு அந்நியச் செலாவணி ஈட்டுவதும் தடைபடும். மேலும் விசைத்தறி தொழிலை நம்பி இருக்கின்ற சிறு தொழில்களும் பாதிக்கப்படுகிறது.

இப்பகுதியில் விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்தாலும், விவசாயத்திற்கு அடுத்து விசைத்தறி தான் பிரதான தொழிலாக விளங்குகிறது. விவசாயத் தொழில் நலிவடைந்திருப்பதால் விசைத்தறியை நம்பித்தான் இப்பகுதி வாழ் மக்கள் வாழ்கிறார்கள். இச்சூழலில் விசைத்தறியும் இயக்கப்படாமல் இருந்தால் இப்பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே விசைத்தறி தொழிலைப் பாதுகாத்து இப்பகுதி வாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பிரபலமாக நடைபெற்று வரும் விசைத்தறி மற்றும் ஜவுளித் தொழிலை மேம்படுத்துவதற்கு சலுகைகளையும், நல்ல பல திட்டங்களையும் அளித்து செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

மேலும் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தமிழக அரசு அதிகாரிகள் கொண்ட முத்தரப்பு குழு உடனடியாக கூடி பேச்சுவார்த்தையின் மூலம் சுமூகத் தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in