வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் சென்னை குடிநீருக்கு என்எல்சி சுரங்க உபரி நீர்

வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் சென்னை குடிநீருக்கு என்எல்சி சுரங்க உபரி நீர்
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் நீர்மட்டம் குறைந்ததால் சென்னை குடிநீருக்கு நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் இருந்து வெளியேறும் உபரிநீரை அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரமாக இருப்பது வீராணம் ஏரியாகும். இந்த ஏரி மூலம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி வட்டப் பகுதிகளில் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த 3 வட்டங்களின் விவசாயத்துக்கு உயிர்நாடியாக இருப்பது வீராணம் ஏரியாகும்.

ஏரிக்கு நீராதாரமாக கீழணை மற்றும் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பகுதியில் பெய்யும் மழை தண்ணீரும் ஏரிக்கு வந்து சேரும். மேட்டூர் தண்ணீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு அனுப்பப்படுகிறது. ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். வீராணம் ஏரியில் இருந்து 2004-ம் ஆண்டு சென்னைக்கு குடிநீர் கொண்டுசெல்ல புதிய வீராணம் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இத்திட்டம் செயல்படுத்தப் பட்டதில் இருந்து ஆண்டுதோறும் ஜூலை மாதம் ஏரி நிரப்பப்படும். சென்னைக்கு விநாடிக்கு 76 கன அடி நீர் பூதங்குடி நீரேற்று நிலை யத்தில் இருந்து அனுப்பப்படும். மேலும் சேத்தியாத்தோப்பில் இருந்து பண்ருட்டி வரை 44 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்தும் சென்னைக்கு அனுப்பப்படும்.

இந்நிலையில், வீராணம் ஏரிக்கு நீர்வரத்து இல்லாதால் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. ஓரிரு நாளில் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்க முடியாத நிலை ஏற்படும்.

என்எல்சி சுரங்கங்களில் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது பூமியில் இருந்து வரும் தண்ணீர், அந்த நிறுவனங்களில் உள்ள குளங்களில் நிரப்பப்படும். மீதமுள்ள உபரி நீர் வெளியேற்றப் படும். அது பரவனாறு வழியாகச் செல்லும். இந்நிலையில், என்எல்சி சுரங்க உபரி நீரை பரவானற்றில் தொட்டி அமைத்து தேக்கி விநாடிக்கு 15 கனஅடி வீதம் மின் மோட்டார் மூலம் எடுத்து சென்னை குடிநீருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது தேவைக்கு ஏற்ப அதிகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

என்எல்சி சுரங்கத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் மூலம் பரவனாறு மற்றும் பெருமாள் ஏரி மூலம் அயன்குறிஞ்சிப்பாடி, குறிஞ்சிப்பாடி, தீர்த்தன்னகிரி, மருவாய், கரைமேடு,கல்குணம், ஆலப்பாக்கம் வரை உள்ள சுமார் 80 கிராமங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெற்று வருகின்றன. என்எல்சி சுரங்க நீரை சென்னைக்கு அனுப்பும் திட்டத்தால் இப்பகுதி விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in