Last Updated : 29 Jan, 2017 10:51 AM

 

Published : 29 Jan 2017 10:51 AM
Last Updated : 29 Jan 2017 10:51 AM

வறட்சியால் கால்நடைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க 570 உலர் தீவனக் கிடங்குகளை தமிழகத்தில் அமைக்க திட்டம்

வறட்சி பாதிப்பால் கால்நடை வளர்ப்பு கடும் சிக்கலுக்கு உள்ளாகி வரும் தமிழகத்தில் 570 இடங் களில் உலர் தீவனக் கிடங்குகள் திறக்கப்பட உள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித் துள்ளனர்.

தமிழகத்தில் பருவமழை பொய்த் ததால் நீர்நிலைகள் வறண்டு, விவசாயம் சீர்குலைந்துள்ளது. விவசாயிகள் பலர் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர். விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. தீவனம் விளைச்சல் இல்லாததால், பலரும் கால்நடைகளை மிகக் குறைந்த விலைக்கு விற்கத் தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், வறட்சி பாதிப்பைக் கருத்தில் கொண்டு, கால்நடைகளுக்கு தீவனம் வழங்குவதற்காக தமிழகம் முழுவதும் உலர் தீவனக் கிடங்கு களை அமைக்க கால்நடை பராமரிப் புத் துறை திட்டமிட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு தமிழகத் தில் வறட்சியால் கால்நடைகளுக்கு தீவனத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, அதை சமாளிக்க அரசு உலர் தீவனக் கிடங்குகளைத் திறந்தது. ரூ.12.50 கோடி ஒதுக்கி, உலர் தீவனமான வைக்கோலை, கிலோ 2 ரூபாய்க்கு மானிய விலையில் விற்பனை செய்தது. அத்திட்டத்துக்கு கால்நடை வளர்ப்போர் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்பட்டது. தற்காலிகமாக செயல்படுத்தப்பட்ட அத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அத்திட்டம் சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், இந்த ஆண்டு கடும் வறட்சி பாதிப்பு இருப்பதால், உலர் தீவனக் கிடங்கு அமைக் கும் திட்டத்தை மீண்டும் செயல் படுத்தவும், முன்பைவிட அதிகமாக 570 இடங்களில் உலர் தீவனக் கிடங்குகள் அமைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் வறட்சியை சமாளிக்க இத்திட்டம் கைகொடுக் கும் என நம்பிக்கை தெரிவிக் கின்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத் தில் 570 இடங்களில் தற்காலிக உலர் தீவனக் கிடங்குகள் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இட வசதி உள்ள கால்நடை மருத்துவமனை, மருந்தகங்களில் கிடங்குகள் அமைகின்றன. 2014-ல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டபோது, வைக்கோல் கிலோ ரூ.7-க்கு வாங்கி அதை கிலோ ரூ.2 என மானிய விலையில் விற்கப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் மானிய விலையில் தீவனம் விற்கப்படும் என எதிர்பார்க்கிறோம். கிடங்கு அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து, மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்று, சென்னையில் உள்ள கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி உள்ளோம். விரைவில் அதற்கான உத்தரவு வரும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றனர்.

பசுந்தீவன உற்பத்தி

இதேபோல, வறட்சியை சமாளிக்க அடுத்தகட்டமாக தமிழகத்தில் சுமார் 15 ஆயிரம் ஏக்கரில் பசுந்தீவனம் வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டமும் செயல் படுத்தப்பட உள்ளது. குறைந்த பட்சம் ஒரு ஏக்கர் விவசாய நிலம், போர்வெல் வசதி உள்ள விவசாயிகளைத் தேர்வு செய்து அவர்களுக்கு மானிய உதவி, தீவன விதை உள்ளிட்டவை வழங்கி இத்திட்டம் செயல்படுத்தப்படும். இதில் கோவையில் 600 ஏக்கர் விவசாய பரப்பை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த இரண்டு திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டால் வறட்சி பாதிப்பில் இருந்து கால்நடைகளை காப்பாற்ற முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x