

மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,''மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வுகளில் 5 ஆயிரத்து 300-க்கும் அதிகமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
கீழடியில் கிடைத்துள்ள தொல்பொருட்கள், சங்க காலத்தில் நகர நாகரிகம் செழித்திருந்தது என்றும், தமிழ் நாகரிகம் தொன்மையானது என்றும் நிரூபிக்கின்றன. கிழடியில் கிடைத்த பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும். இதற்காக , 2 ஏக்கர் நிலத்தை அப்பகுதியில் தமிழக அரசு வழங்க வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில், ''சிந்து சமவெளி நாகரீகத்தை போல, மதுரை அருகிலும் ஒரு நகர்ப்புற நாகரீகம் இருந்ததற்கான தடயங்களை கீழடி தொல்லியல் ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளன. இங்கு கிடைத்துள்ள பொருட்கள் மைசூர் கொண்டு செல்லப்படுகின்றன. இதனை தடுக்க தமிழகத்தில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.