

வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பசலனத்தால் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தேவகோட்டை, ஓமலூர், மதுராந்தகம், தளி, வால்பாறை, திண்டிவனம், திருப்புவனம் ஆகிய இடங்களில் தலா 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருக்கிறது. காட்டுமன்னார்கோவில், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சேலம், புதுச்சேரி, வாழப்பாடி, பெருங்களூர், தேவாலா, காரைக்குடி, வானூர், நெய்வேலி, சிறுமுஷ்ணம், தேன்கனிக்கோட்டை, ஊட்டி, வந்தவாசி ஆகிய இடங்களில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
“அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும். சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரத்தில் சில பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்யும்.
அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.