

வழக்கறிஞர்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, புதிய விதிகளை சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரி வித்து, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள வழக் கறிஞர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்: பார் கவுன்சிலுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை அதிகாரங்களைப் பறிக்கும் வகையிலான விதிகளை, உயர் நீதிமன்றம் இயற்றக்கூடாது.
வழக்கறிஞர்கள் சட்டப் பிரிவு 34(1)-ன் கீழ் இயற்றப்பட்ட விதிகள், சட்டம், அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்பதால், அவற்றை ரத்து செய்யும் வரை நீதிமன்ற பணி புறக்கணிப்பு தொடரும். வரும் 22-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.