

உலக யோகா தினத்தை முன்னிட்டு சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி விடுத்த கோரிக்கையின்பேரில், ஆண்டு தோறும் ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினமாக கொண்டாடப் படும் என ஐ.நா. அறிவித்தது. முதலா வது யோகா தினம் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. 2-வது யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. அலுவலக வளாகத்திலும் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. உலகின் பல்வேறு நகரங்களிலும் யோகா தினக் கொண்டாட்டங்கள் நடக்கின்றன.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் யோகா பயிற்சியை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். சண்டிகரில் உள்ள கேபிடல் வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடை பெறும் யோகா நிகழ்ச்சியில் 35 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். ‘யோகா கீத்’ என்ற கருத்திசை பாடலும் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.
நேரு யுவ கேந்திரா சங்கதன் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நாடு முழுவதும் 1 லட் சத்து 260 யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் சிறப்பு யோகா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் காலை 7 மணி முதல் 9 மணி வரை பிரமிட் ஆன்மிக மன்ற இயக்க நிறுவனர் பிரம்மரிஷி தலைமையில் 44 ஆயிரம் பேர் யோகா தினம் கொண்டாடுகின்றனர். தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் காலை 6.30 மணி முதல் 8 மணி வரை டாக்டர் ராதிகா மாதவன், மீனாட்சி சுந்தரம் தலைமையில் டாக்டர்கள், மருத்துவ மாணவர் கள், நோயாளிகள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் யோகா பயிற்சி நடக்கிறது. இதனை நிறுவனத்தின் இயக்குநர் தொடங்கி வைக்கிறார்.
ராயபுரம் ஸ்டான்லி அரசு மருத்துவமனை சார்பில் காலை 7 மணிக்கு மின்ட்டில் இருந்து மருத்துவமனை வரை டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலி யர்கள் கலந்துகொள்ளும் யோகா விழிப்புணர்வு பேர ணியும், 9 மணிக்கு மருத்துவ மனையில் யோகா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. சென்னை மருத்துவக் கல்லூரியில் (எம்எம்சி) தேர்வுக்கூட அறையில் காலை 9 மணிக்கு யோகா நிகழ்ச்சி நடக்கிறது.
ஈஷா அறக்கட்டளை சார்பில் அனைத்து ஈஷா யோகா மையங்களிலும் இலவச யோகா வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் காலை 8 மணி முதல் 8.45 மணி வரை காந்தி இர்வின் சாலையில் உள்ள ரயில் கல்யாண மண்டபத்தில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய ராணுவ தலைமையகம் சார்பில் தீவுத்திடலில் காலை 6 மணிக்கும், ஆவடி ராணுவ ஆடை தொழிற்சாலை சார்பில் கிரி நகர் மைதானத்தில் காலை 6.30 மணிக்கும் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.