

லோக் ஆயுக்தா நிறுவப்படும், புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும், குடிசைகளற்ற தமிழகம் உருவாக்கப்படும் போன்ற முக்கிய அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்தன.
15-வது சட்டப் பேரவையின் முதலாவது கூட்டத்தொடர் ஆளுநர் ரோசய்யா உரையுடன் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணிக்குத் தொடங்கியது.
ஆளுநர் ரோசய்யாவுக்கு அனைத்துக் கட்சிகளின் சார்பில் வரவேற்பு தரப்பட்டது. மொத்தம் 38 பக்கங்கள் கொண்ட உரையை அவர் வாசித்தார்.
லோக் ஆயுக்தா நிறுவப்படும், புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும், குடிசைகளற்ற தமிழகம் உருவாக்கப்படும் போன்ற முக்கிய அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருந்தன.
ஆளுநர் உரையில் சில முக்கிய அம்சங்கள்:
'லோக் ஆயுக்தா' நிறுவப்படும்:
அரசு நிர்வாகத்தின் வெளிப்படைத் தன்மையினை மேம்படுத்த உறுதிகொண்டுள்ள இந்த அரசு, லோக்பால் சட்டத்தில் குறிப்பிட்ட சட்டத் திருத்தங்களுக்கு பாராளுமன்றம் சட்டம் இயற்றியவுடன், உரிய சட்ட வரைமுறையை வகுத்து, தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா என்ற அமைப்பை நிறுவும்.
புதிய கிரானைட் கொள்கை வகுக்கப்படும்:
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டவாறு, மாநில அரசுக்கான நிதி ஆதாரங்களைப் பெருக்க, புதிய கிரானைட் கொள்கையை வகுக்கவும், தாது மணல் விற்பனையை நேரடியாக அரசே ஏற்று நடத்தவும் இந்த அரசால் நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிசைகளற்ற தமிழ்கத்தை நோக்கி..
குடிசைகளற்ற கிராமங்களையும், குடிசைப் பகுதிகளற்ற நகரங்களையும் உருவாக்குவதே இந்த அரசின் தொலைநோக்குக் கொள்கையாகும். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்குடன், தமிழகத்தில் வீட்டுவசதியை மேம்படுத்த, மத்திய மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து வீட்டுவசதி வழங்கும் ஒரு இயக்கத்தை இந்த அரசு செயல்படுத்தும்.
நியாயமான நிதிப் பகிர்வுமுறைக்கு வலியுறுத்துவோம்:
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் அதே வேளையில், மத்திய அரசு மற்றும் மாநிலங்களுக்கிடையே நியாயமான நிதிப் பகிர்வுமுறை கடைபிடிக்கப்பட வேண்டும் என இந்த அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.
தமிழை ஆட்சி மொழியாக்க நடவடிக்கை:
மத்திய அரசின் ஆட்சி மொழியாகவும், சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாகவும் தமிழ்மொழியினை அறிவிக்க இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
ஜல்லிக்கட்டு தடை நீக்க நடவடிக்கை:
தமிழ்ச் சமுதாயத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்திருக்கும் ஜல்லிக்கட்டின் மீதான தடையை அகற்ற, இந்த அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கும்.
நதிநீர்ப் பிரச்சினைகளில் நியாயமான உரிமைகள் நிலைநாட்டப்படும்:
மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர்ப் பிரச்சினைகளில், தமிழ்நாட்டின் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பதில், தொடர்ந்து உள்ளார்ந்த கவனம் செலுத்தப்படும்.
152 அடி:
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி அவர்கள் படைத்த சாதனையை மேலும் வலுப்படுத்த, அந்த அணையின் முழுக் கொள்ளளவான 152 அடிக்கு நீர்மட்டத்தை உயர்த்தி, தென்தமிழக விவசாயிகளின் வளத்தைப் பெருக்க, அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொள்ளும்.
காவேரி மேலாண்மை வாரியம் அமைய நடவடிக்கை:
காவேரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பினை முழுமையாக அமல்படுத்த, காவேரி மேலாண்மை வாரியத்தையும், காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவையும் விரைவில் அமைப்பதற்கான உச்ச நீதிமன்றத்தின் ஆணையைப் பெற, இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
அம்மா அழைப்பு மையம் மேம்படுத்தப்படும்:
இருபத்து நான்கு மணிநேரமும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்து, மக்களின் குறைகளைத் தீர்க்கும் சிறப்பான அமைப்பாக ‘அம்மா அழைப்பு மையம்’ உருவெடுத்துள்ளது. இந்த அமைப்பு, மேலும் வலுப்படுத்தப்படும்.
'விரைவில் விரிவான வெள்ளத் தடுப்புத் திட்டங்கள்'
அண்மையில் பெய்த பலத்த மழையாலும் பெருவெள்ளத்தாலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, சென்னை மாநகரிலும் சில கடலோர மாவட்டங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.
வரும் காலங்களில் இதுபோன்ற வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை நிரந்தரமாகத் தணிக்க, சென்னையிலும், பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய கடலோர மாவட்டங்களிலும் விரிவான வெள்ளத் தடுப்புத் திட்டங்களை இந்த அரசு விரைவாகத் தயாரிக்கும்.
அமைதியை நிலைநாட்ட தொடர் முயற்சி:
இணையதளம் மூலம் நடைபெறும் குற்றங்கள் உள்ளிட்ட, அனைத்துக் குற்றங்களையும் திறம்படக் கையாள்வதற்காக, நவீன கருவிகள் மற்றும் இதர வசதிகள் காவல் துறைக்கு வழங்கப்பட்டு, அதன் செயல்திறன் மேலும் வலுப்படுத்தப்படும்.
பொது அமைதியை நிலைநாட்டி, தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாகத் திகழச் செய்ய இந்த அரசு அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து எடுக்கும்.
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க முயற்சி:
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், பிற குடிமக்களைப் போன்று, சம உரிமைகளும் வசதி வாய்ப்புகளும் கிடைப்பதை உறுதிசெய்ய முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
வேளாண் மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாடுபடும்:
பயிர் பலவகையாக்கல் முறையை விரிவாக்கம் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடையப்படும். இத்தொழில்நுட்பங்களின் வாயிலாக தொடர்ந்து வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் உயரவும், விவசாயிகளின் வருவாய் பெருகவும் வழிவகை செய்யப்படும்.
மீனவ மக்களின் வருமானத்தைப் பெருக்க முக்கியத்துவம்:
நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதால், மீனவ மக்களின் வருமானத்தைப் பெருக்க, மீன்வளத் துறையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது.
மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்துதல், புதிதாக மீன் இறங்கு தளங்களை அமைத்தல், குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகளை உருவாக்குதல் மற்றும் மீன் பதப்படுத்தும் இதர கட்டமைப்பு வசதிகளை நிறுவுதல் போன்ற உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாகச் செயல்படுத்தப்படும்.
மீன்பிடி தடைக் காலத்திலும், மீன்பிடி குறைவாக உள்ள காலங்களிலும், மீனவர்களின் நலனுக்காக வழங்கப்படும் உயர்த்தப்பட்ட உதவித்தொகை தொடர்ந்து வழங்கப்படும். சூரை மீன்பிடிப் படகுகள் மூலமாக ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க சிறப்பான கவனம் செலுத்தப்படும்.
கச்சத்தீவை மீட்ப்போம்:
பாரம்பரிய மீன்பிடிப்புப் பகுதிகளில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படையினரால் நமது மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு வரும் நிகழ்வுகள் மேலும் தொடராமலும், அவர்களின் உயிருக்கும் உடைமைக்குமான பாதுகாப்பையும், வாழ்வாதாரத்திற்கான உரிமையையும் உறுதிசெய்திட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு இலங்கை அரசு மூலம் நிரந்தரத் தீர்வு காண, மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தும். கச்சத்தீவை மீட்டு, பாக் நீரிணைப்புப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிட, தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
அம்மா திட்டங்கள் தொடரும்:
அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதியாக உள்ள இந்த அரசு, அனைவருக்கும் பயனளிக்கும் பொது விநியோகத் திட்டத்தை அமல்படுத்தும் கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்கும்.
பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாட்டை சிறந்த முறையில் கண்காணிப்பதற்கு, அனைத்து செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்படும்.
விலைவாசியைக் கட்டுப்படுத்திட இந்த அரசு உருவாக்கிய முன்னோடித் திட்டங்களான ‘பண்ணைப் பசுமைக் கடைகள்’, ‘அம்மா மருந்தகங்கள்’, ‘அம்மா உணவகங்கள்’, ‘அம்மா குடிநீர்’, ‘அம்மா சிமெண்ட்’, ‘அம்மா உப்பு’ போன்ற திட்டங்கள் ஏழை எளிய மக்களையும், நடுத்தரக் குடும்பங்களையும் விலைவாசி உயர்விலிருந்து பாதுகாத்துள்ளன. இந்த முன்முயற்சிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
மின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படும்:
தமிழகம் இன்று மின்மிகை மாநிலமாக உருவாக்கி, தமிழக வரலாற்றில் உன்னத சாதனையை இந்த அரசு நிகழ்த்தியுள்ளது. மின் நுகர்வின் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்துத் தடைகளும் கடந்த 05-06-2015 முதல் விலக்கப்பட்டு, தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மின்வெட்டு இல்லாத மாநிலமாக விளங்குவதையும், தரமான மின்சாரத்தை தொடர்ந்து வழங்குவதையும் இந்த அரசு உறுதி செய்யும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், 13,000 மெகாவாட் அனல் மின்திறனும், 3,000 மெகாவாட் சூரியஒளி மின்திறனும் கொண்ட 10 அலகுகள் கூடுதலாக நிறுவப்பட்டு, தமிழ்நாட்டின் மின் உற்பத்தித் திறன் மேலும் அதிகரிக்கப்படும். தற்போது பணிகள் நடைபெற்று வரும் மின் திட்டங்களை விரைவாக முடித்து, மாநிலத்தின் மின் உற்பத்தித் திறனை வெகுவாக உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை:
போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, சீரான வாகனப் போக்குவரத்தை உறுதிசெய்ய, புறவழிச் சாலைகள், வெளிவட்டச் சாலைகள், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள் போன்றவை அமைக்கப்படும்.
சாலைகளின் தரத்தினை மேம்படுத்துவதற்காக, ‘ஒருங்கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டமும் செயல்பாடு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
விலையில்லா வேட்டி சேலை திட்டம் தொடரும்:
கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பை வழங்குவதற்காக, ‘விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கும் திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும்.
நெசவுத் தொழிலை பாரம்பரியமாக செய்துவரும் பகுதிகளில், வேலைவாய்ப்பு வசதிகளை அதிகரித்திட, புதிய ஜவுளித் தொகுப்புகளும் பட்டு ஜவுளிப் பூங்காக்களும் அமைக்கப்படும்.
பொது சுகாதாரம் மேம்படுத்தப்படும்:
இல்லந்தோறும் கழிப்பறை வசதியை ஏற்படுத்தி, திறந்தவெளியில் மலம் கழிக்கும் சுகாதாரமற்ற பழக்கத்தை தமிழ்நாட்டிலிருந்து முற்றிலும் ஒழிக்க, இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. அனைத்து கிராமங்களிலும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் பொது சுகாதாரம் மேலும் மேம்படுத்தப்படும். ‘தூய்மைக் காவலர்களை’ நியமித்து தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு பல மாநிலங்கள் தற்போது பின்பற்றி வருகின்றன என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
கிராம மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு நடவடிக்கை:
கிராம மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, சுயஉதவிக் குழுக்கள், கிராமப்புற வறுமை ஒழிப்புக் குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்புகள் மூலம் பெருமளவில் குறு தொழில்கள் துவங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்.
நகர்ப்புரக் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம்
நாட்டிலுள்ள பெரிய மாநிலங்களுள், மிக அதிகமாக நகரமயமான மாநிலமாக தமிழ்நாடு உள்ளதால், நகர்ப்புரக் கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தி தரம் உயர்த்துவது அவசியமாகிறது. நகர்ப்புரங்களில் தரமான சாலை வசதிகள், மழைநீர் வடிகால்கள், திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் மேலாண்மை, தெரு விளக்குகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும். ‘ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டு இயக்கமும், ‘சென்னைப் பெருநகர வளர்ச்சி
இயக்கமும்’ மத்திய அரசின் திட்டங்களான ‘திறன்மிகு நகரங்கள் திட்டம்’ மற்றும் ‘அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றங்களுக்கான திட்டங்களுடன்’ ஒருங்கிணைக்கப்பட்டு, நகர்ப்புறக் கட்டமைப்பு வசதிகள் மேலும் மேம்படுத்தப்படும்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர்:
மாநிலத்தில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் போதுமான அளவு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்குவது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். கிராமப்புற, நகர்ப்புறப் பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் குடிநீர்த் தேவையினை பூர்த்தி செய்ய, புதிய குடிநீர் வழங்கும் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவதற்கு இந்த அரசு முன்னுரிமை அளிக்கும். சென்னைக்கு அருகே, நெம்மேலி மற்றும் பேரூரில் முறையே, நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் மற்றும் 400 மில்லியன் லிட்டர் திறன்கொண்ட இரண்டு கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களை நிறுவுவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்படும்.
2017 இறுதியில் மெட்ரோ முழுமையான சேவை:
கோயம்பேடு மற்றும் ஆலந்தூருக்கு இடையே பயணிகள் சேவைகளை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தற்போது வழங்கி வருகிறது. சின்னமலைக்கும் விமான நிலையத்திற்கும் இடையேயும், ஆலந்தூருக்கும் பரங்கிமலைக்கும் இடையேயும் பயணிகள் சேவைகள் விரைவில் துவக்கி வைக்கப்பட உள்ளன.
மெட்ரோ இரயில் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு, 2017 ஆம் ஆண்டு இறுதிக்குள், அனைத்துத் தடங்களிலும் முழுமையாக பயணிகள் சேவைகள் தொடங்கப்படும்.
வண்ணாரப்பேட்டையிலிருந்து திருவொற்றியூர் வரையிலான மெட்ரோ இரயில் வழித்தடம்-ஐ இன் நீட்டிப்புப் பணிகள் 3,770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தும் வகையில், இந்த அரசு தனது தொடர் முயற்சிகளால் மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன. இதைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான பணிகளையும் இந்த அரசு விரைவாக செயல்படுத்த உறுதி கொண்டுள்ளது.
ஆண்டுதோறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு:
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, இந்த அரசு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த உள்ளது. 29. நோக்கியா மற்றும் அதற்கான உபபொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்க இந்த அரசு தீவிரமான முயற்சிகளைச் செய்து வருகிறது. முதலமைச்சர் அவர்கள், அண்மையில் பாக்ஸ்கான் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் கொண்ட குழு ஒன்றை தைவானுக்கு அனுப்பி வைத்தார்கள். மத்திய அரசிடம் நிலுவையிலுள்ள பிரச்சினைகளுக்கு, அந்த அரசின் மிக உயர்மட்ட அளவில் அணுகி சுமூகத் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
புதிய தொழிற்பேட்டைகளுக்கு நிதியுதவி:
தொழில் முனைவோர் அமைப்புகள் தனியாகவோ அல்லது சிட்கோவுடன் இணைந்தோ புதிய தொழிற்பேட்டைகளை நிறுவுவதற்கான நிதியுதவிகள் வழங்கும் இந்த அரசின் கொள்கை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடரும்:
ஏழை மக்களும் மருத்துவ வசதிகளை எளிதாகப் பெறுவதை உறுதி செய்வதற்காக, மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்படும். இதற்காக, தேவையான இடங்களில் புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்தல், ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்துதல், வட்ட மற்றும் மாவட்ட அளவிலான மருத்துவமனைகளை தரம் உயர்த்துதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இந்த அரசின் இலட்சியத் திட்டமான ‘முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்’ மூலமாக, ஏழை எளிய மக்கள் தரமான மருத்துவ சிகிச்சை வசதிகளை, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பெற்று வருகின்றனர். இத்திட்டம் மக்களின் நலன் காக்க தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இலவச லேப்டாப் திட்டம் தொடரும்:
தமிழ்நாட்டில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா மடிக்கணினிகள், உயர் கல்வியில் இடைநிற்றலைத் தடுப்பதற்காக சிறப்பு ஊக்கத் தொகை, பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள் போன்ற கல்வி உபகரணங்கள், நான்கு சீருடைத் தொகுப்புகள், காலணிகள், பேருந்து கட்டணச் சலுகைகள், மிதிவண்டிகள் போன்ற திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
‘குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை’, உண்மை உணர்வுடன் இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும்.
ஏழை எளிய மக்களும் உயர்கல்வியை தடையின்றி அணுகி பயில்வதற்காகவும், உயர்கல்வியின் தரத்தை தமிழ்நாட்டில் உயர்த்துவதற்காகவும், உயர்கல்வியில் நாட்டிலேயே உயர்ந்த சேர்க்கை விகிதம் கொண்ட மாநிலம் என்ற சிறப்பு நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளவும், இந்த அரசு தேவையான பகுதிகளில் புதிய கல்லூரிகளை அமைத்து, உயர்கல்விக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அனைத்து முயற்சிகளையும் செய்யும். தகுதியுள்ள அனைவரும் உயர்கல்வி பயில நிதியுதவி அளிக்கும்
முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தைத் திரும்ப வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். வேலை பெறுவதற்கான வாய்ப்புகளைப் பெருக்க, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து திறன் மேம்பாடு சார்ந்த பயிற்சிகளை மாணவர்கள் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
'பொது நுழைவுத் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு'
தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வி மூலமாக மட்டுமே மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களை சேர்க்க முடியும் என்ற உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவால், தமிழக மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய பெருத்த பாதிப்புகளை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது.
எனவே, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கைக்கு, தற்போது மாநில அரசு பின்பற்றி வரும் வெளிப்படையான நியாயமான முறையே தொடர்வதற்காக இந்த அரசு தொடர்ந்து பாடுபடும். பொது நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு நிரந்தர விலக்கு அளிக்கத் தேவையான சட்ட வரைமுறையை மத்திய அரசு மூலம் இயற்றுவதற்காக இந்த அரசு தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கும்.