

ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு ஆசிரியர்களை தேர்ந் தெடுப்பதற்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சி.பிரியவதனா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு நடந்த பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் (டெட் தேர்வு) பங்கேற்றேன். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு 104 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன். தேர்வில் வெற்றி பெற்றவர்களை ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் அடங்கிய அரசாணை ஒன்றை கடந்த 5.10.2012 அன்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு மற்றும் பி.எட். படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வெயிட்டேஜ் மதிப்பெண்களை வழங்கி அதிக வெயிட்டேஜ் மதிப்பெண்களை பெறுவோரை பணிக்கு தேர்வு செய்ய அரசாணையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 முதல் 104 மதிப்பெண்கள் வரை பெற்றவர்களுக்கு 42 மதிப்பெண்கள், 105 முதல் 119 வரை பெற்றவர்களுக்கு 48 மதிப்பெண்கள், 120 முதல் 135 வரை பெற்றவர்களுக்கு 54 மதிப்பெண்கள், 136 முதல் 150 வரை பெற்றவர்களுக்கு 60 மதிப்பெண்கள் என்ற ரீதியில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்குவது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு மற்றும் பி.எட். படிப்பு களில் பெற்ற மதிப்பெண்களுக்கு ஏற்ப ஒவ்வொரு கட்டத்துக்கும் தனித்தனியாக வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கும் முறையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்கள் பெற்ற ஒருவருக்கு வழங்கப்படும் 42 வெயிட்டேஜ் மதிப்பெண்கள்தான் 104 மதிப்பெண்களைப் பெற்ற எனக்கும் வழங்கப்படுகிறது. ஆனால், என்னைவிட ஒரேயொரு மதிப்பெண் கூடுதலாக அதாவது 105 மதிப்பெண்கள் பெற்றவருக்கு 48 வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அளிக்கப்படுகிறது.
இதேபோன்றே 12-ம் வகுப்பு, பட்டப் படிப்பு மற்றும் பி.எட். படிப்புகளுக்கும் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் வழங்கும் முறை சரியாக நிர்ணயம் செய்யப்பட வில்லை. சட்ட விரோதமான முறையில் தற்போதைய வெயிட் டேஜ் மதிப்பெண் வழங்கும் முறை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் அது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒவ்வொருவரும் பெறும் மதிப்பெண்களுக்கு ஏற்ப சரியான விகிதத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் பிரியவதனா கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.நமோ நாராயணன் ஆஜரானார். அப்போது இந்த மனு தொடர்பாக அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.